1985ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி 65பேருடன் நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருக்கும் போது நடுக்கடலில் வைத்து கடற்படையினரால் வெட்டியும் குத்தியும் அடித்தும் 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் சிங்கள இராணுவத்தை தாக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் மக்கள் பழிவாங்கப்பட்டனர்.
அன்றைய சம்பவமும் அவ்வாறு தான் இடம்பெற்றது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற மோதல் ஒன்றிற்காக நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி குமுதினியில் வந்த மக்கள் நடுக்கடலில் வைத்து கடற்படையால் வஞ்சகம் தீர்க்கப்பட்டனர்.
குமுதினிப் படுகொலை நினைவான கட்டப்பட்ட கட்டிடமும் உடைக்கப்பட்டு தற்போது நினைவுத்தூபி மட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்
குமுதினி படுகொலையின் நினைவாக தென்னங்கன்றுகள் விநியோகம் செய்திருக்கிறார் அமைச்சர் பொ.ஐங்கரநேசன். இது தொடர்பாக வளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு…..

நெடுந்தீவு ஐக்கிய இராச்சியக் கிளையின் ஏற்பாட்டிலும் கி.சாரதாதேவியின் தலைமையிலும் குமுதினி படுகொலை நினைவாக விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குமுதினி படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவையொட்டி, நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் கடந்த 14ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவீல் இருந்து குறிகட்டுவான் நோக்கிச் சென்று கொண்டிருந்த படகில் பயணம் செய்தவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் குமுதினி உட்பட 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களை நினைவு கூறும் வகையிலேயே 700 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி கி.சாரதாதேவியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு இந்தத் தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி வைத்துள்ளார்கள்.
இந்த தென்னங்கன்றுகள் வடமாகாண விவசாய அமைச்சுக்குச் சொந்தமான கிராஞ்சிப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட நல்லினக்கன்றுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
