பெயர்ப்பலகைகளில் தமிழ் கட்டாயம் – தவெக செயல்படுத்துமா?

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கடைகளும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்கவேண்டும் என 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திமுக அரசு உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவில்,பெயர்ப் பலகைகளில்,தமிழ்ப் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம் என்றும்,தவறினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கே.சுரேந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்தத் தயாராக இருப்பதாகவும்,அதற்கு மூன்றுமாத காலஅவகாசம் வேண்டும் எனவும் மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி,கடைசி வாய்ப்பாக நவம்பர் 1 ஆம் தேதிக்குள்,கடைகளின் பெயர்ப் பலகைகளை தமிழில் மாற்றவேண்டும் எனவும்,தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் ஒப்புக்கொள்ளும் இந்தத் தீர்ப்பின் மூலம் அனைத்துக்கடைகளிலும் தமிழில் பெயர்ப்பலகை வைத்தாக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதை முறையாகக் கண்காணித்து செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.இதை முறையாகச் செய்வார்களா? அல்லது திமுக அரசு அறிவித்தது என்பதற்காகக் கண்டுகொள்ளாமல் விடப்போகிறார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளன.

நவம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு இந்தக்கேள்விக்கான விடை தெரியும்.

Leave a Response