கூட்டணி வைத்தால்தான் நிதி என்போரை ஒழிக்கவேண்டும் – சீமான் சீற்றம்

புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

திமுக – அதிமுக ஆகியன வெவ்வேறு கட்சி என்று நினைப்பது போல ஒரு அறிவற்றத்தனம் எதுவும் இல்லை. இரண்டும் ஒரே கட்சிதான்.

காங்கிரசு – பாஜக, திமுக – அதிமுக ஆகிய கட்சிகளின் கொடியில் வண்ணம் மாறும் அவர்களின் கொள்கையில் எண்ணம் மாறாது. வெவ்வேறு கட்சி என்று நினைத்தால் அது தவறு. இவர்கள் எல்லோருமே இலவசத்தைக் கொடுத்து மக்களின் ஆசையைத் தூண்டி ஏமாற்றி வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து இறந்தால், நடிப்பவரை பார்க்க வந்து நெரிசலில் இறந்தால் ரூ.10 லட்சம். எல்லையில் போராடி நாட்டைக் காக்க இறக்கும் இராணுவ வீரரருக்கு ஒத்தரூபாய் இல்லை.இது நாடா?.

புதுச்சேரியில் காங்கிரசு பலஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது.பாஜக அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.இந்தமண்ணுக்கு ஒரு மாநில உரிமையைப் பெற்றுத்தர முடியவில்லை.

கேரளாவில் மாஹே, ஆந்திராவில் ஏனாம் என தொகுதி வைத்திருக்கிறீர்கள்.அங்கு நான் போய் நிற்க முடியவில்லை.அந்த மண் சார்ந்தவர்கள்தான் நிற்கிறார்கள்.அந்த இரண்டு தொகுதிக்கும் அமைச்சர் கொடுத்துவிடுகிறீர்கள்.அவர்கள் உள்துறை,வருவாய்த்துறை எடுத்துக்கொள்கிறார்கள்.பிரதமர் மோடி, அமித் ஷா, இராகுல் காந்தி வருகிறார்கள்.அவர்கள் பிரச்சினையை தவிர வேறு என்ன தருகிறார்கள்?

மக்களை ஏமாற்றி வாக்கைப் பறிக்க மட்டுமே திட்டமிட்டால் எப்படி நல்ல ஆட்சியாளனாக இருக்கமுடியும்?காவிரிநீரைப் பெற்றுத் தருவதில் காங்கிரசு, இராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன? இங்குள்ள பாஜக தலைவரின் கருத்து என்ன? நான் மட்டும் இந்தியனாக இருக்கவேண்டும்.அவர்கள் கன்னடனாகவும்,மலையாளியாகவும் இருப்பார்களா?.

ஒரு நதிநீர்ப் பகிர்வில் உரிய ஒதுக்கீட்டைப் பெற்றுத்தராத பாஜகவுக்கு எதுக்கு ஓட்டுப்போடவேண்டும்.எத்தனைமுறை காங்கிரசு ஆட்சியில் முதலமைச்சராக இரங்கசாமி இருந்திருக்கிறார்.ஆனால்,நாங்கள் மாஹே,ஏனாம் வேண்டாம்,மாநிலஉரிமை வேண்டும் என்று முன்வைத்த பிறகு மாநிலஉரிமை கொடுங்கள் என்று இரங்கசாமி கேட்கிறார்.

இத்தனை பிரச்னையை தந்தது யார்? இந்த ஆட்சியாளர்கள்தான்.காங்கிரசுக்கு நேரெதிர் கோட்பாடு பாஜக என்கிறார்கள். பாஜகவுக்கு நேரெதிர் கோட்பாடு காங்கிரசு என்கிறார்கள். காமராஜரின் வாரிசு எனக்கூறும் இரங்கசாமி,எப்படி பாஜகவுடன் கூட்டணி வைக்கிறார்.ஒரேமொழி இந்தியை ஏற்கிறாரா?அல்லது மும்மொழிக் கொள்கையை ஏற்கிறாரா? இந்துக்கள் நாடு இந்தியா என்பதை ஏற்கிறாரா? இந்தக் கொள்கையில் உடன்படுகிறாரா?

மத்தியிலும்,மாநிலத்திலும் ஒரேஆட்சி இருந்து தீர்த்த பிரச்சினை என்ன? மாநிலங்கள் கொடுக்கும் வரிவருவாய்தான்,மத்தியஅரசுக்குக் கிடைக்கும் நிதி.ஒரேஆட்சி இருந்தால்தான் நிதியைக் கொடுப்பேன் என்பது எவ்வளவு பெரிய கொடுங்கோல் ஆட்சி.

எனக்கு உடன்பட்டால்தான் நிதி கொடுப்பேன் என்றால்,அதற்காகவே அவர்களை ஒழிக்கவேண்டும்.நான் கொடுத்த நிதியை வைத்துக்கொண்டு தட்டை ஏந்து பிச்சை போடுகிறேன் என்றால் அவர்களை ஒழிக்கவேண்டும்.என்னை வரிக்காகவும்,வாக்குக்காவும்,நிலத்தின் வளத்துக்காகவும்தான் வைத்திருக்கிறாய்.அவர்களுடன் கூட்டணி வைத்தால்தான் நமக்கு எல்லாம் தருவார்கள் என்பது கையாலாகத்தனம்.

வருமான வரித்துறை ரெய்டு நடத்திய இடங்களில் பாஜக பேரம் பேசி பணம் வாங்கவில்லையா ? வெளிப்படையான நிர்வாகம் எங்கே?

2050-க்குள் புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று பாஜகவுடன் சேர்ந்துள்ள எல்ஜேகே கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறி இருக்கிறார்.அவர் தனியாக நின்றிருந்தால் பரவாயில்லை.ஏற்கெனவே உள்ள திருடனுடன் சேர்ந்ததால்,அவர்கள் சார்லஸைத்தான் ஒழிப்பார்கள்.திருட்டை ஒழிக்கமுடியாது.

யாருடனும் நான் சேரமாட்டேன்.என்னுடைய கொள்ளையில் தெளிவு உள்ளது.குழப்பம் இல்லாமல் முடிவு எடுப்பேன்.அடுத்தவன் கால்களை நம்பி ஜோஸ் சார்லஸ் மாாட்டின் பயணம் இருக்கக்கூடாது.என்.ஆர்.காங்கிரசிடம் 2 தொகுதி வாங்கிவிட்டு புதுச்சேரியை எப்படி சிங்கப்பூராக மாற்றமுடியும்.தனியாக நின்று தோற்று,தோற்று தன்னுடைய தத்துவத்தை மக்களிடம் விதைக்கவேண்டும் என்றார்.

Leave a Response