
பீகாரில் 10 ஆவது முறை மற்றும் சுமார் 20 வருடங்களாக முதலமைச்சராகத் தொடர்கிறார் ஜேடியுவின் தலைவரான நிதிஷ் குமார். தற்போது அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகச் செல்வது பீகார் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம்,பீகார் அரசியலின் சமநிலை மாறி பாஜக முக்கியத்துவம் பெற வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. எனவே,இதற்கு ஜேடியுவினர் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நிதிஷ்குமார் தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகுவார் என அவர்களால் நம்பமுடியவில்லை.நிதிஷின் இந்தமுடிவின் மீது அவரது கட்சியினர் எதிர்க் கருத்துகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இது பற்றி ஜேடியுவின் பீகார் மாநிலத் தலைவர் ரஞ்சன் பட்டேல் கூறுகையில், “எனக்கு அழுவதைத் தவிர வேறு வழியில்லை. நிதிஷ் குமாரை முதலமைச்சராக்க நாங்கள் தடியடி, உதை, குத்துகளைத் தாங்கினோம்.
2025 ஆம் ஆண்டில், நிதிஷ்குமாருக்கு வாக்குகள் கேட்க வீடு வீடாகச் சென்றோம்.அவர் இனி முதலமைச்சர் இல்லை எனில்,பீகார்வாசிகள் எங்கே போவார்கள்? யாராவது முதலமைச்சரை மாற்றும் சக்தி தங்களுக்கு இருப்பதாக நம்பினால், அவர்கள் தேர்தலை நடத்தி பெரும்பான்மையைப் பெறலாமே” எனக் கொதிக்கிறார்.
இந்தச் சிக்கலில் ஜேடியுவின் முக்கிய மூத்ததலைவர்களான விஜய் சவுத்ரி,லல்லன் சிங் மற்றும் சஞ்சய் ஜா மீது புகார் கூறப்படுகிறது.இந்த மூவரின் தலைமையில் பல ஜேடியுவினர் நிதிஷ் முடிவை ஆதரித்துப் பேச நிர்ப்பந்திக்கப்படுகிறதாம். இதனால், இந்த மூவரும் கட்சியை அழிப்பதாகக் கூறி ஜேடியுவின் மேலவை உறுப்பினரான சஞ்சய் காந்தியும், நிதிஷ் குமாரின் மாநிலங்களவைத் தேர்தலுக்கு ஆதரவளிக்கவில்லை.
நிதிஷின் முடிவு,ஜேடியுவின் பல தலைவர்களும், தொண்டர்களும் தங்கள் அரசியல் எதிர்காலத்திற்கும், அரசியல் வாழ்க்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கருதுகின்றனர்.
பீகாரின் அதிகார மாற்றம் ஜேடியுவின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்தி, பாஜகவை வலுப்படுத்தும் எனவும் ஒரு கருத்து உருவாகி வருகிறது. ஏனெனில், ஜேடியுவின் முழு அரசியல் களமும் நிதிஷ் குமாரைச் சுற்றியே சுழல்கிறது.
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் அளவிற்கு அவரது கட்சிக்குள் வேறு எந்தத் தலைவரும் இல்லை. இதன்காரணமாக, நிதிஷ் டெல்லிக்குச் சென்றால், ஜேடியு தனது உறுதியான வாக்குவங்கியின் திறனை இழக்கும்.
நிதிஷின் மகன் நிஷாந்த்குமார் துணைமுதலமைச்சராக அமர்த்தப்படுவது பெயரளவிற்கே இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
இறுதியில் ஜேடியுவின் சட்டமன்ற உறுப்பினர்களில் பலரும் ஏதாவது ஒரு பெரியகட்சியுடன் இணையவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அக்கட்சியின் தலைவர்கள் அஞ்சுகிறார்கள்.பீகாரில் பெரியகட்சிகளில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் ஆகியன பாஜக உள்ளன.இவற்றில்,பாஜக இப்போது ஒன்றியத்திலும் அதிகாரத்தில் உள்ளதால் ஜேடியூவை விழுங்கிவிடும் என்று அனைவரும் அச்சப்படுகிறார்கள்.


