எடப்பாடி கருத்துக்கு மாற்றுக் கருத்து சொன்ன கே.பி.முனுசாமி – பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அடுத்துள்ள தளிஅள்ளி கிராமத்தில் நடந்த எடப்பாடி அதிமுக பாக முகவர்கள் குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி சமஉ கலந்துகொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது….

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதுவரையில் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி இருந்து வந்தது.

ஆனால், எதிர்வரும் தேர்தல் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக – திமுக இரு கட்சிகளில் செல்வாக்கு மிக்க தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் மறைந்து விட்டனர். இந்தச் சூழ்நிலையில் தான் நாம் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம்.

இவ்வாறான நிலையில், தமிழ்நாட்டில் புதிய, புதிய கட்சிகளும் உருவாகி மாய பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள், வெளியே சென்று மக்களைச் சந்திப்பதில்லை, மக்களோடு நேரடியாகத் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை, ஏதோ சினிமாவில் நடித்தார்கள் அந்தப் புகழை வைத்துக்கொண்டு ஒரு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதைப் போல தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டு, அவர்களும் தேர்தல் களத்தில் வந்து நிற்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில்தான் நாம் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். இந்தத் தேர்தலில் நாம் விழிப்போடு இருக்கவேண்டும்

இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.

நடிகர் விஜய், இந்தத்தேர்தலில் திமுகவும் தவெகவுக்கும்தான் போட்டி என்று பேசிவருகிறார்.அதற்கு மாறாக திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி என்று எடப்பாடி பேசினார்.

அதில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று எடப்பாடியின் கருத்துக்கு மாறாக கே.பி.முனுசாமி சொல்லியிருப்பது எடப்பாடி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response