
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘தமிழ் முழக்கம் ’ மேடைப்பேச்சு – ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பன்னாட்டுப் பயிலரங்கம் 5 நாட்கள் நடக்கிறது. இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது.
அதில், தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், பேச்சாளர் சுகிசிவம், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, கோ.தளபதி சமஉ மற்றும் 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
38 மாவட்டங்களில் இருந்து இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு 18 ஆளுமைகள் பயிற்சி அளிக்கின்றனர். மழையால் பள்ளி வளாகங்களில் தேங்கிய நீரை உடனே அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் மின் கசிவுகள் ஏதும் உள்ளதா? என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். மழைக்காலங்களில் சூழலுக்கேற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
கரூரில் கொடும் நேர்ச்சியின்போது, நீங்கள் அழுத காணொலிக் காட்சிகளுக்கு விஜய் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து பேசுகிறார்களே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அமைச்சர் கூறியதாவது…
உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சு அமைய வேண்டும். இது பேச்சாளர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் எடுத்துக்காட்டாகக் கூறலாம். உணர்ச்சி அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குக்குச் சமம். அறிவு அதிகமாகி, உணர்ச்சிகள் குன்றியிருந்தால் அது மரத்திற்குச் சமமானது என திருவள்ளுவர் கூறியுள்ளார். முதலில் நாம் மனிதர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். கல்லைக் கடவுளாக்கத் தெரிந்தவனுக்கு மனிதனாக மாறத்தெரியவில்லை
இவ்வாறு அவர் கூறினார்.
