
தமிழ்த்திரை இசையை உலக அளவில் புகழ்பெறச் செய்தவர் இசைஞானி இளையராஜா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
1975 ஆம் ஆண்டு தொடங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
திரையிசை மட்டுமின்றி பல்வேறு தனியிசைப் படைப்புகளையும் வெளியிட்டுள்ளார் இளையராஜா. முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை சிகரத்தையும் தொட்டு சாதனை படைத்துள்ளார்.
இந்தச் சாதனையைப் படைத்த முதல் தமிழர் மட்டுமல்ல, முதல் இந்தியரும் ஆவார். ஆசிய நாடுகளைச் சேர்ந்த எவரும் இச்சாதனையை இதுவரை நிகழ்த்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இளையராஜா கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி இலண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைப் பாராட்டி, அவருக்கு நினைவுப்பரிசு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என்று அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா நேற்று மாலை நடந்தது. சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50 என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்தப் பாராட்டு விழா நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இன்னிசை நிகழ்ச்சியும், தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, கங்கை அமரன் போன்ற இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
இளையராஜாவின் குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு பாராட்டு விழா துவங்கியது. ‘அமுதே தமிழே…’ என்ற பாடல் முதலில் பாடப்பட்டது. இந்தப் பாடலை இளையராஜாவும் அவரது குழுவினரும் பாடினர். தொடர்ந்து ‘‘ராக்கம்மா கையத் தட்டு…, செந்தூரப்பூவே…, அந்தி மழை பொழிகிறது…, சின்னத்தாய் அவள்…’’ உள்ளிட்ட பல பாடல்கள் மேடையில் நேரலையில் பாடி, இசையமைக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் இளையராஜாவின் இன்னிசை மழையை இரசித்தனர்.தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி தலைமையுரை ஆற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது….
ராஜா ராஜாதி ராஜா இந்த ராஜா. நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா, இசை எண்ணும் தேனை எப்போதும் தரும் தேனிக்காரரை பாராட்ட, புகழ அனைவரும் கூடியிருக்கிறோம். இசைஞானி கலைத்தாய்க்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, தமிழ்த்தாய்க்கும் சொந்தமானவர். அதனால் தான் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழாவை, அவரைக் கொண்டாடும் விழாவை நடத்திக் கொண்டு இருக்கிறோம். பாராட்டும், புகழும் ராஜாவுக்கு புதுசா, இசைஞானியைப் பாராட்டுவதால் நாம்தான் பெருமையடைகிறோம். அவர் திரையுலகப் பயணத்தைத் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. நம்முடைய இதயங்களை ஆளத்தொடங்கி அரை நூற்றாண்டு ஆகிறது. திரைப்பயணத்தில் பொன்விழா கண்டுள்ள சிம்பொனி சிகரம் தொட்ட தோழர், தமிழருக்கு உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பண்ணைபுரத்தில் இருந்து புறப்பட்டு திறமையும், உழைப்பும் இருந்தால் எந்த உயரங்களையும் அடையலாம் என்று எல்லாருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் ராஜாவோடு பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே தமிழ்நாட்டில் இருக்கமுடியாது. ராஜாவின் பாடல்களை மனதில் ஏற்றி தங்கள் இன்ப, துன்பங்களை பொருத்திப் பார்க்காத மனிதர்களே இருக்கமுடியாது. இளையராஜா இசை, தாயாகத் தாலாட்டுகிறது. காதலின் உணர்வுகளைப் போற்றுகிறது, வெற்றிப் பயணத்திற்கு ஊக்கம் அளிக்கிறது. வலிகளை ஆற்றுகிறது. இவர் இளையராஜா மட்டுமல்ல, இணையற்ற ராஜா, ராஜா இருந்தால் அவருக்கு நாடு இருக்கும், மக்கள் இருப்பார்கள், எல்லைகள் இருக்கும். ஆனால் இந்த ராஜா மொழிகள், நாடுகள், எல்லைகளைக் கடந்தவர் எல்லா மக்களுக்குமானவர். திரைஇசையை கடந்த இளையராஜா இசை அவரின் திறனை, வீச்சை, ஆற்றல், ஆழத்தை, உயரத்தை எடுத்துச்சொல்லும்.
இசைஞானி இளையராஜா பற்றி சமூக வலைதளத்தில் ஒருவர் எழுதிய சிலவரிகளைக் கூறுகிறேன். இளையராஜா மட்டும் இசை அமைத்திருந்தால் திருக்குறள், நற்றிணை, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், சிலப்பதிகாரம் எங்களுக்கு மனப்பாடம் ஆகி இருக்கும் என்று எழுதியிருந்தார். நானும் இதையேதான் தமிழ் ஆர்வலராக உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். சங்கத் தமிழுக்கு, தமிழ் இலக்கியங்களுக்கு இசை அமைத்து சில ஆல்பங்கள் வெளியிட வேண்டும். எப்போதும் முதலமைச்சரிடம் தான் கோரிக்கை வைப்பார்கள், ஆனால் முதல்வராக தமிழ் மக்கள், தமிழர்கள் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இசை ஆளுமையும், தமிழ்ப் புலமையும் கொண்ட நீங்கள் இந்தக் கடமையைச் செய்ய வேண்டும்.
ஏற்கனவே தமிழர்கள் நெஞ்சில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் நீங்கள், உங்கள் இசை மூலமாக தமிழ்ச்சுவை அடுத்த தலைமுறையினருக்குப் பரிமாறப்பட வேண்டும். ராஜா கைய வச்சா அது ராங்கா போனது இல்லை, அந்த நம்பிக்கையுடன் இந்தக் கோரிக்கையை வைக்கிறேன். இசையால் நம்முடைய நெஞ்சங்களை ஆளும் இளையராஜாவுக்கு எத்தனையோ புகழ்மகுடங்கள், பாராட்டுகள், பத்மபூஷண், பத்மவிபூஷன் என்று எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும் அவரது ஆற்றலுக்குப் பொருந்தி என்றைக்கும் அவருடன் பயணிக்கின்ற பட்டம்தான் கலைஞர் வழங்கிய இசைஞானி பட்டம், அது பட்டமா? அது பெயராகவே நிலைத்துவிட்டது. இசைஞானி உயரத்தைப் பார்த்துப் பெருமைப்பட்ட கலைஞர், இசைஞானி வழங்கிய மரியாதை யாரும், யாருக்கும் தராத மரியாதை.
வரலாற்றில் எத்தனையோ மாநிலங்களில் ஒரே பிறந்த நாளை கொண்டாடக் கூடியவர்களாக இருப்பார்கள்.
யாரானாலும் இன்னொருவருக்காக பிறந்தநாளை மாற்றியது கிடையாது. ஆனால் இசைஞானி, கலைஞருக்காக தன்னுடைய பிறந்தநாளை ஜூன் 2 ஆம் தேதிக்கு மாற்றிக் கொண்டார்.அந்தவகையில் உள்ளத்திலும் ராஜாவாக உயர்ந்திருக்கிறார், தமிழாலும் இசையாலும் உயர்ந்து கலைஞருக்கும், இசைஞானிக்கும் இருந்தது நட்பு. என்னுடைய மகள் செந்தாமரை நாட்டிய அரங்கற்றத்தில் பங்கேற்று வாழ்த்தினார். அந்த நட்போடு அவர் இலண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் பண்ணப்போகிறார் என்றதும் முதல்ஆளாக அவர் வீட்டிற்குச் சென்று பாராட்டுகள், வாழ்த்துகளைக் கூறினேன். அவரும் சிம்பொனி சாதனை நிறைவேற்றிய வெற்றிக் கழிப்போடு என் வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்தார். இந்த அன்புக்குக் கட்டுப்பட்டவன், கடமைப்பட்டவன், அந்த அன்போடு சொல்கிறேன், இது இசைஞானி இளையராஜாவுக்காக நடத்தக்கூடிய விழா அல்ல, உங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கும் விழா ஆகும்.
இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் சார்பாக மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள ராஜாவின் இரசிகர்கள் சார்பில் இந்த விழாவில் ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நிச்சயம் இது நிறைவேறும் என்று நம்புகிறேன்.
இசைத்துறையில் ஆர்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கிற இசைகலைஞர்களை ஊக்கும் விக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும். இந்த அரங்கத்தில், இசைஞானியுடைய இசையைக் கேட்டு மயங்கியிருக்கும் எல்லோருடைய உணர்வுகளை, அவருடைய பாடல் வரிகளிலேயே சொல்லவேண்டும் என்றால், “இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே” இசைஞானி அவர்களே… உங்கள் பயணம் இன்னும் பல்லாண்டுகாலம் தொடர வேண்டும், தொடர வேண்டும் என்று தமிழ்மக்களின் சார்பில் வாழ்த்துகிறேன். வாழ்க இளையராஜா, வாழ்க இசைராஜா.
இவ்வாறு அவர் பேசினார்.


