
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், இந்தக் கூட்டணிக்கு அதிமுகவில் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் கூட்டணி அறிவிப்பதற்காக சென்னை வந்த அமித்ஷா அளித்த பேட்டியில், ‘தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவும், பாஜகவும் இணைந்து சந்திக்கும்; தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் பதவி அதிமுகவைச் சேர்ந்தவருக்கு வழங்கப்படும்’ என்று கூறினார்.
அமித்ஷாவின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பதில் அளித்து, எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், ‘தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையாது;அமித்ஷாவின் கருத்து தவறாகப் பரப்பப்படுகிறது. தேசிய அளவில் பிரதமர் மோடியும், மாநில அளவில் நானும் கூட்டணியை வழிநடத்துவோம். ஆட்சியில் பகிர்வு இல்லாமல் அதிமுக தனித்து ஆட்சியமைக்கும்’ என்று கூறினார்.
சில நாட்களுக்கு முன் சென்னையில் செய்தியாளர்கள், அதிமுகவில் இருந்து ஒரு முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்று அமித்ஷா கூறியுள்ளார். இது முதலமைச்சர் வேட்பாளரைத் தெளிவுபடுத்தாத நிலை உள்ளதே?’ என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, இதில் டெல்லி எடுக்கிற முடிவுதான். உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் கூறியபிறகு, அதற்கு அடுத்தாற்போல் யார் பேசினாலும், அது சரியல்ல என்பதுதான் என்னுடைய கருத்து. இப்போது, அதைப்பற்றியே கேள்வி கேட்டு, அதற்கு ஒரு வடிவத்தைக் கொடுப்பது சரியா? என்றார்.
அதன்பின், தற்போது நடக்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று பேசிவருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் உள்துறை அமித்ஷா நேற்று முன்தினம் அளித்த பேட்டியில்,
தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக இணைந்து மாபெரும் வெற்றி பெறுவோம். பாஜக நிச்சயம் அரசில் அங்கம் வகிக்கும் என்றார்.அப்போது, நடிகர் விஜய் நடத்தும் தவெக, பாமக ஆகிய கட்சிகள் உங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்குமா என்றபோது, ‘இப்போது அதுபற்றிக் கூற முடியாது. ஆனால் நாங்கள் ஓரணியில் கட்சிகளை இணைக்க முயற்சி செய்வோம்’ என்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று அமித்ஷா 4 ஆவது முறையாக வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரத்தில் நேற்று முன்தினம் சுற்றுப்பயணத்தை முடித்து புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்தார். அங்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகளை, வியாபாரிகளை அழைத்து நேற்று கலந்துரையாடி மனுக்களை பெற்றார்.
அப்போது, எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘2026 சட்டசபை தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், நன்றி வணக்கம் என்று கூறிவிட்டு, செய்தியாள்ர்களின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் சென்றுவிட்டார்.
இதனால் அதிமுகவினர் கடும் குழ்ப்பத்தில் இருக்கிறார்கள். சென்னையில் பேசும்போது அமித்ஷா சொன்ன பிறகு அதற்குப் பிறகு யார் பேசினாலும் சரியல்ல என்று சொல்லி அமித்ஷாவின் கருத்தை ஏற்றுக்கொண்டு பேசினார்.ஆனால் இப்போது கூட்டங்களில் அதற்கு மாறாகப் பேசிக்கொண்டிருக்கிறார். அமித்ஷா மீண்டும் மீண்டும் இப்படிச் சொல்கிறாரே? என்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் இருக்கிறார்.இப்படி மாற்றி மாற்றிப் பேசுவதுதான் அக்கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


