கடலூரில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் அறிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். ஒவ்வொருவராக அறிவிக்கும்போது, ஒருவரது பெயர் சொல்லும்போது மட்டும் கூட்டம் கைதட்டலில் அதிர்ந்தது. அவர்தான் ஆர்.கே.நகர் தொகுதியின் வேட்பாளர் தேவி. அதில் என்ன விஷேசம் என்கிறீர்களா? தேவி ஒரு திருநங்கை.
திருநங்கை சமூகத்தில் இருந்து ஏற்கெனவே பாரதி கண்ணம்மா என்பவர் 2014 மதுரை நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். ஆனால், ஒரு கட்சியின் வேட்பாளராக ஒரு திருநங்கை முதன்முதலில் அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேவியின் கருத்துகள்…

2009 ஈழப் போரில் கொத்துக் கொத்தாக நம் உறவுகள் மடிந்தபோது, மிகவும் பாதிக்கப்பட்டேன். தமிழர்கள் நலன், தமிழர்களுக்கு சொந்தமான நாடுகளிலேயே மிகவும் தரக்குறைவான நிலையில் இருப்பதைக் கண்டு மனம் நொந்தேன். மற்ற மாநிலங்களில் எல்லாம் மண்ணின் மைந்தர்கள் ஆண்டு கொண்டிருக்கும்போது, தமிழகத்தில் இருந்த நிலை மேலும் என்னை மனம் நோகச் செய்தது. திருநங்கைகளுக்கு இன உணர்வு இருக்கக்கூடாதா என்ன? அந்த சமயத்தில், நாம் தமிழர் இயக்கத்தில் ஆர்வம் ஏற்பட்டு, அவர்களுடன் இணைத்துக் கொண்டேன். அப்படியே அவர்களுடனான பயணத்தில் இருந்தபோது, தேர்தலுக்கு அண்ணன் சீமான் வேட்பாளர் தேர்வு செய்கிறார் என்று தெரிந்த போது, என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.
திருநங்கையாகப் பிறந்த இந்த சமூகத்தில் பலர் ஏகப்பட்ட இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். எனக்கு அந்த சூழ்நிலை இல்லை. இருந்தாலும், அப்படி பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றும் நோக்கில் செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அதனால்தான் தேர்தலில் போட்டியிட விருப்பப்பட்டேன். நான் சேலம் மாவட்டத்தில் போட்டியிடுவதாகத்தான் அண்ணனிடம் கேட்டிருந்தேன். அவர்கள்தான், என்னை சென்னையில் போட்டியிட தேர்வு செய்துள்ளார்கள்.


