மின்கட்டண உயர்வை திரும்பப் பெறுங்கள் – டிடிவி.தினகரன் கோரிக்கை

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜூலை 18 அன்று, ஒன்றிய அரசின் மின் அமைச்சகத்தின் அறிவிக்கையின் படி 10 சதவீதம் வெளிநாட்டு நிலக்கரியைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மின்சாரத்தின் சராசரி விலை அதிகரிந்து மின்வழங்கல் விலை மற்றும் சராசரி வருவாய்த் தேவைக்கான இடைவெளி அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என அறிவித்த போதிலும் மூன்றில் இரண்டுபங்கு மின்சாரம் அதிக விலைக்கு கடந்த காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டணத்தை 8 வருட இடைவெளிக்குப் பிறகு உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியிருக்கிறார்.

இந்த மின்கட்டண உயர்வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியிருப்பதாவது….

தி.மு.க அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு மின்கட்டண உயர்வு என்ற அடுத்தப் பரிசை வழங்கியிருக்கிறது. விடியல் ஆட்சி தரப்போவதாக சொன்னவர்களின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களின் தலையில் இடியாகவே விழுந்து கொண்டிருக்கிறது.

மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டுவரப்போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்காமல், மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். இது தான் திரு.ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ?

ஏற்கனவே, நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களையும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நிலையையும் மனசாட்சியோடு யோசித்துப் பார்த்து தி.மு.க அரசு மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response