விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக் கழகம் உருவாக்கியது ஏன்? – பொ.ஐங்கரநேசன் விளக்கம்

ஆடிப்பிறப்பு நாளான ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) ஆடிப்பிறப்பைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக யாழ்ப்பாணம் உரும்பிராயில் கொண்டாடியது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்.

அப்போது,

பண்பாட்டை உள்வாங்காத தேசியம் உள்ளீடற்ற கொழுக்கட்டை போன்றது என ஆடிப்பிறப்பு விழாவில் பொ.ஐங்கரநேசன் கூறினார்.

தேசியத்தின் பிரதான கூறாக ஒரு இனம் பேசுகின்ற மொழி எவ்வாறு அமைந்துள்ளதோ அதே அளவுக்கு அந்த இனத்தின் தனித்துவமான பண்பாடும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், சிங்களபௌத்த மேலாதிக்கத்தினாலும் உலகமயமாக்கலினாலும் தமிழ் மக்களின் பண்பாடு சிதைக்கப்பட்டு அதன் தனித்துவத்தை இழந்துகொண்டிருக்கின்றது. இதைப்பற்றிப் பெயரில் தமிழ்த்தேசியத்தைக் கொண்டுள்ள அரசியற் கட்சிகள் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. பண்பாட்டை உள்வாங்காமல் தேசியம் முழுமைபெறாது. அது உள்ளீடற்ற கொழுக்கட்டை போன்றது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஆடிப்பிறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) உரும்பிராயில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஆடிப்பிறப்பு தமிழ் மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்துகின்ற ஒரு பண்டிகையாகும். பன்மைத்துவம் மிக்க ஆரோக்கிய உணவைக் கூடிப்பகிர்ந்துண்ணும் உணவுப் பண்பாட்டை எடுத்தியம்புகின்ற ஆடிப்பிறப்புக்குப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கிய காலமும் ஒன்றிருந்தது. ஆனால், இன்று விடுமுறை மாத்திரம் இல்லாமற் போகவில்லை. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஆடிப்பிறப்பும் அதுசார்ந்த கொண்டாட்டங்களுங்கூட இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான தமிழர் அரசியலில் விடுதலைப்புலிகளின் காலத்திலேயே தமிழ் இனத்தின் பண்பாடு குறித்தும் கலை இலக்கியங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதற்கென கலை பண்பாட்டுக் கழகம் என்று தனியான ஒரு அலகே உருவாக்கப்பட்டது. போராளிகளிடம் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்பாடு குறித்த உணர்வுபூர்வமான பிரக்ஞை மக்களிடமும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், முள்ளிவாய்க்கால் யுத்தம் எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது.

தேசியம் என்பது அரசியல்வாதிகளிடமல்ல; அது மக்களிடம்தான் உள்ளது. ஓர் இனத்தை மற்றைய இனங்களிடமிருந்து வேறுபிரித்துக்காட்டும் தனித்துவமான வாழ்வியல் முறைமையே தேசியமாகும். இதனாலேயே ஓர் இனத்தை அழிக்க நினைப்பவர்கள் தேசியத்தின் வேர்களில் ஒன்றான பண்பாட்டைச் சிதைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால், பண்பாட்டுச் சிதைவு மக்களாலேயோ அல்லது அரசியல்வாதிகளாலேயோ கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது. இந்நிலை மாறவேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response