
பொதுமக்களின் கடும் எதிர்ப்பால், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வளாகத்தில், கோக கோலா குளிர்பானம் தயாரிப்பு நிறுவனத்துக்கு அளித்த அனுமதியை, ‘சிப்காட்’ நிர்வாகம் ரத்து செய்து உள்ளது.
ஆலை அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்கு, நாங்கள் காரணம் அல்ல; உள்ளூர் எதிர்ப்பும், அரசு நிர்வாக தாமதமும் தான் காரணம்; எனவே, தமிழகத்தில் முதலீடு செய்ய தயாராக இல்லை’ என, இந்துஸ்தான் கோக கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆலை நிறுவ, 2014ல், 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்தோம்; இதற்காக, பெருந்துறை, ‘சிப்காட்’ வளாகத்தில், எங்களுக்கு ஒதுக்கிய நிலத்தில், கட்டுமான பணிகளைத் துவங்க முன்வந்தோம். ஆனால், எதிர்பாராத வகையில் ஏற்பட்ட உள்ளூர் எதிர்ப்பால், கட்டுமான பணிகளை துவங்க தாமதம் ஏற்பட்டது; இருந்தும், பல அனுமதிகளை பெற நடவடிக்கை எடுத்தோம். குறிப்பாக, புது திருப்பூர் பகுதி மேம்பாட்டு நிறுவனத்திடம், தண்ணீர் பெற ஒப்பந்தம் செய்தது; ‘சிப்காட்’ வளாக நுழைவு வாயிலிருந்து, கோக கோலா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு, தண்ணீரை கொண்டு வர பாதை அமைப்பது; கழிவு நீரை வெறியேற்ற அனுமதி பெறுவது; கோவில் நிலத்தை பயன்படுத்துவதால், அதற்கு கட்டணம் செலுத்தியது ஆகிய பணிகளை செய்தோம். இதுதவிர, கட்டுமானத்துக்கான ஒப்புதல் பெற, ‘சிப்காட்’ நிர்வாகத்துக்கு, பலமுறை முறையிட்டும், அனுமதி கிடைக்கவில்லை. இதனால், கட்டுமான பணியை துவங்க தாமதமானது. இதோடு, உள்ளூர் எதிர்ப்பையும், எங்களால் சமாளிக்க முடியவில்லை. எனவே, எங்கள் முதலீட்டை தமிழகத்தில் செய்ய தயாராக இல்லை என, ‘சிப்காட்’ நிர்வாகத்துக்கு தெரிவித்துவிட்டோம். இதுவரை, தமிழக அரசுக்கு செலுத்திய தொகையை, உடனடியாக திருப்பித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த ஆலை அமைப்பதை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களில் முன்னின்ற தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன், அரசின் முடிவை வரவேற்றிருக்கிறார். கேரளம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்பட 7 மாநிலங்களில் இந்தக் குளிர்பான ஆலைகள் மூடப்பட்டு விட்டன. பெருந்துறை சிப்காட்டில் குளிர்பான ஆலை அமைப்பதற்கான நில ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்தது வரவேற்புக்குரியது. இது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றியாகும் என்று கூறியிருக்கிறார்.


