எனக்குள் ஒருவன் – திரைப்பட விமர்சனம்

நாயகன் சித்தார்த், நலிந்த திரையரங்கம் ஒன்றில் வேலை செய்துகொணடிருக்கிறார்.

தூக்கம் வராமல் தவிக்கும் அவருக்கு லூசியா என்றொரு மாத்திரை கிடைக்கிறது. அந்த மாத்திரையை சாப்பிட்டால், மனதுக்குப் பிடித்த வாழ்க்கை கனவாக வரும். விழித்தெழும்போது தடைபடும் கனவு அடுத்து தூங்கும்போது விட்ட இடத்திலிருந்து தொடரும் என்பது அந்த மாத்திரையின் மகத்துவம். திரையரங்கில் வேலை செய்யும் சித்தார்த்துக்கு திரையில் மின்னும் நட்சத்திரம் போல் வாழும் கனவு.

நிஜத்தில் இருக்கும் அத்தனை பாத்திரங்குளும் சின்னச்சின்ன மாற்றங்களுடன் கனவிலும் வருகின்றன. கனவின் முடிவென்ன? கடைசியில் என்னவாகிறது? என்பதைப் பல்வேறு திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள். திரையரங்கின் இருளில் இருக்கை தெரியாமல் தடுமாறுகிறவர்களைச் சரியாக உட்காரவைக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கும் அப்பாவி, திரையுலகில் மின்னும் இளமையான துடிப்பான நட்சத்திரம் ஆகிய இரண்டுவகைக் கதாபாத்திரங்களுக்கும் நல்ல வேறுபாடு காட்டி நடித்திருக்கிறார் சித்தார்த். நட்சத்திரமாக இருக்கும்போது இயல்பாகத் தெரிகிறார். ஏழையாக நடிப்பது கொஞ்சம் மிகையாக இருக்கிறது.

நிஜத்தில் பிட்சாகடையில் வேலை செய்பவராகவும் கனவில் நடிகையாகவும் வருகிறார் நாயகி தீபாசன்னதி. சில காட்சிகளில் நன்றாகவும் சில காட்சிகளில் பார்க்கமுடியாமலும் இருக்கிறார். நடிப்பு வருகிறது. தொலைக்காட்சியில் சித்தார்த்தின் பேட்டி ஒளிப்பரப்பாகும்போது காதல் இருக்கிறதா? என்கிற கேள்விக்கு அவர் பதில் சொல்ல ஓரிருவிநாடி தாமதிக்கும்போது கலங்கிப்போய்ப் பார்க்கும் ஒருபார்வையில் தேர்ந்த நடிகையாகத் தெரிகிறார் தீபாசன்னதி.

ஆடுகளம் நரேன், அஜய்ரத்னம், யோக்ஜேபி ஜான்விஜய் போன்றோர் படத்துக்குப் பலமாக இருக்கிறார்கள். நரேனின் கதாபாத்திரம் இரண்டுகதைகளிலும் நன்றாக இருக்கிறது. ஜான்விஜய் பேசும் வசனங்கள் படத்தின் கதைக்குப் பலம் சேர்ப்பவை.

நடிகரின் கதையை கறுப்புவெள்ளையிலும் ஏழையின் கதையை வண்ணத்திலும் காட்டியிருக்கிறார்கள். இரண்டுகதைகளுக்கும் வேறுபாடு காட்டத்தான் இப்படிச் செய்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தைப் பொய்யாக்கி அதற்குச் சொல்லப்பட்டிருக்கும் காரணம் வியப்பை அளிப்பதோடு பொருத்தமாகவும் இருக்கிறது. கடைசியில் நடிகர் பாத்திரம்தான் உண்மை, திரையரங்குக்காரன் பாத்திரம் கனவு என்று சொல்லியிருக்கிறார்கள்.

தொடக்கத்திலேயே இதைச் சொல்லியிருந்தால், நடுத்தரவாழ்க்கையில் இருக்கும் பெரும்பகுதி மக்கள், பிறவிப்பணக்காரன் ஏழைகளின் வாழ்க்கையை வாழவேண்டும் என்று ஆசைப்படுவானா, காதில் பூ சுற்ற அளவில் யா? என்று கேட்டுப் புறந்தள்ளிவிடுவார்கள் என்பதால் கடைசியில் சொல்லியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. கடைசியில் உண்மையை விளக்கும் நேரத்தில் திரையரங்குக்காரனின் வீட்டில் நடக்கும் மாற்றங்கள் திரைக்கதையின் உச்சம். அதை நன்றாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பிரசாத்ராமர்.

சந்தோஷ்நாராயணனின் இசையில் பாடல்களும் பின்னணிஇசையும் படத்துக்குப் பொருத்தமாக இருக்கின்றன. ஏண்டி பாடல் இன்னும் சில மாதங்கள் கேட்டுக்கொண்டேயிருக்கும். கோபிஅமர்நாத்தின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் இருக்கிறது. வண்ணமயமான திரையுலகைக் கறுப்புவெள்ளையில் காட்டவேண்டும் என்பதையும் நலிந்துபோன திரையரங்கு, நடுத்தரக்குடும்பவீடு உட்பட வண்ணங்களால்கூட அழகு சேர்த்துவிடமுடியாத இடங்களை வண்ணத்தில் காட்டவேண்டும் என்பதை அவர் ஒப்புக்கொண்டு பணியாற்றியது வரவேற்கத்தக்கது.

நுணுகி நுணுகி செய்யப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் திரைக்கதை ஒரு படைப்பாக வியக்கவைப்பதும் பலம் சேர்ப்பதுமாக இருக்கிறது என்பதில் மாற்றமில்லை. அதேசமயம், இந்தத்திரைக்கதையின் பயணத்தை எல்லோராலும் சரியாகப் பின்தொடர்ந்துவிடமுடியுமா என்பது கேள்விக்குறி.

 

Leave a Response