
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளராக நடிகை ஓவியா கலந்து கொண்டிருந்தார். பின்னர், பல்வேறு விவகாரங்கள் காரணமாக நிகழ்ச்சியின் பாதியிலேயே அவர் வெளியேறினார்.
ஓவியா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நேரத்தில் ஓவியாவுக்கென பெரும் ரசிகர் படை உருவானது. அவர்களுக்காக கொச்சியில் உள்ள தனது வீட்டிலிருந்து ஓவியா காணொலி மூலம் பேசியுள்ளார்.
அதில், ”எனக்கு இவ்வளவு ரசிகர்கள் அன்பாகவும், ஆதரவாகவும் இருப்பீர்கள் என நினைத்துப் பார்த்ததே இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லவ் யூ கய்ஸ். எனது ஹேர் ஸ்டைல் குறித்து பல தகவல்கள் வருகின்றது. சிகிச்சைக்காக எனது தலைமுடி வெட்டப்படவில்லை.
உண்மை என்னவென்றால் விக் தயாரிக்கும் நிறுவனம் என்னை அணுகியது. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது முடிகள் போய்விடும். இதனால், அவர்களுக்கு விக் தேவைப்படுகிறது. அந்த விக் தயாரிப்பதற்காகவே எனது தலைமுடியை தானமாக வழங்கினேன். உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கும் என நம்புகிறேன். முடி வெட்டியதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை” என ஓவியா தெரிவித்துள்ளார்.
மேலும், “என்னை பல ரசிகர்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொள்வதாகத் தெரியவந்தது. அது மிகவும் தவறு. யாரும் இங்கு சரியானவராக இல்லை, நான் உள்பட. ஒவ்வொருவருக்கும் பாஸிட்டிவ், நெகட்டிவ் பக்கங்கள் உண்டு. மற்றொருவரை அப்படியே நகலாக நீங்கள் எடுத்துக் கொண்டால் அது உங்களது சுய மரியாதையை பாதிக்கும். ஒருவரிடம் பிடித்த விஷயங்களை நீங்கள் பின்பற்றலாம். ஆனால், மொத்தமாக ரோல்மாடலாக எடுத்துக்கொள்வது வேண்டாம்
உங்களுக்கென ஒரு ஸ்டைலை உருவாக்குங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். என்னைப்பற்றி வெளியான அனைத்து தகவல்களுக்கும் இந்த வீடியோ மூலமாக பதிலளிக்க விரும்பினேன்” எனவும் ஓவியா தெரிவித்துள்ளார்.


