கலைஞர் நடத்திய தமிழன் நாளேடு- ஓவியரின் பரவச அனுபவம்


தலைவர் கலைஞரைச் சந்தித்த வேளை…

இன்று தலைவர் கலைஞரின் பிறந்தநாள். நேற்று கவிக்கோ மறைந்த நாள். இந்த இரண்டு ஆளுமைகளின் பிணைப்பில் ஒரு ஓரமாக நானும் பங்கேற்ற ஒரு நிகழ்வைச் சொல்லவா..? இப்போது சொல்லாமல் எப்போது சொல்லப் போகிறேன்..?

என்னை எழுதுபவனாகவே இப்போதுள்ள திரைப்பட எழுத்துலகம் அறியும். ஆனால், அதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் பெரும்பாலான முன்னணி பத்திரிகைகளில் ‘லே அவுட் ஆர்ட்டிஸ்ட்டா’கப் பணியாற்றியவன். இது ஒரு சில நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.

சாவி, விகடன், குங்குமம், தாய், தினகரன், தினசரி (நாளிதழ்கள்) என்று நான் கால்வைத்த அல்லது ‘கை வைத்த’ பெரு நிறுவனங்களின் பட்டியலுடன் சிறு பத்திரிகைகளைச் சேர்த்தால் அந்தப் பட்டியல் கூட்ஸ் வண்டியாய் நீளும்.

அவற்றுள் குங்குமம் கொஞ்சம் ஸ்பெஷல். ‘குங்குமம் வேணுஜி’ என்று கடந்த 15 ஆண்டுகளாக அறியப்பட்டுக் கொண்டிருக்கிறேன். (குங்குமத்தை விட்டு வெளியில் வந்து 4 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையிலும்…)

அதற்குப் பல வருடங்கள் முன்பாகவே அதே குங்குமத்தில், லே அவுட் ஆர்ட்டிஸ்டாகவும் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றியிருக்கிறேன்.

அப்போதுதான் அந்த நிகழ்ச்சி நடந்தது. வருடம் 1991. முரசொலி, குங்குமம், முத்தாரம், வண்ணத்திரை, சுமங்கலி, குங்குமச்சிமிழ் என்று எண்ணற்ற சஞ்சிகைகள் ஒரு காம்பவுண்டுக்குள்ளிருந்து வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருந்த நேரம். அதில் இன்னொரு மகுடமாக ‘தமிழன்’ என்கிற நாளிதழைக் கொண்டுவர கலைஞரும், முரசொலி மாறன் அவர்களும் திட்டமிட்டார்கள். அதற்கு ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் அவர்களைத்தான் ஆசிரியராகவும் ஆக்கினார்கள்.

அதற்கு சற்றே முந்தைய நிகழ்வாக நாளேட்டுக்கான இலச்சினை … ‘லோகோ’ தயாரிக்கும் பணி நடந்தது. அப்போதெல்லாம் இப்படி ‘லோகோ’ மற்றும் தலைப்புகளை ஓவியர் கையினால்தான் எழுதித் தயாரிக்க வேண்டும். இப்போது போல் சிஸ்டத்தின் பட்டனைத் தட்டி லோகோ டைப் செய்து நீட்டி… சுருட்டி… இழுத்து… வளைத்து… இதெல்லாம் கிடையாது.

எல்லாமே ஓவியனின் மூளையில் கருப்பெற்று கைகள் வழியே பிரசவிக்க வேண்டும்.

தமிழன் ‘லோகோ’வை என்னை எழுதப் பணித்தார் அப்போது குங்குமம் இதழின் பொறுப்பாசிரியராக இருந்த ‘பாவை சந்திரன்’. கலைஞர் அவர்களுக்கும், முரசொலி மாறன் அவர்களுக்கும் குண்டு குண்டான எழுத்துகள் மீது காதல் உண்டு என்பதை அறிந்து வைத்திருந்த பாவை, அப்படியே என்னை எழுதச் சொன்னார். எழுதி முடித்து ‘நெகடிவ்’ எடுத்து, ‘புரோமைட்’ பிரிண்ட் போட்டு ‘டச்சப்’ செய்து வைத்திருந்தேன். கலைஞரிடம் அதைக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும்.

கீழே அலுவலகத்துக்கு கலைஞர் வந்து விட்டதாகச் சொன்னார்கள். நான் பாவை அவர்களிடம் லோகோவைக் கொடுத்தேன். அவர் என்ன நினைத்தாரோ என்னையே கலைஞரிடம் கொண்டு அதைக் காண்பித்து ஒப்புதல் பெற்று வரச் சொன்னார். அதில் ஏதாவது மாறுதல் தேவைப்பட்டால் அதை நேரடியாக நான் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம்.

ஒரு 10 x 10 அறைக்குள் ஒரு யுக புருஷனை ஒரு அடிக்கும் குறைவான தூரத்தில் (அல்ல… பக்கத்தில்) சந்தித்தது அப்போதுதான். அப்போது முரசொலி மாறன் அவர்களும் உடனிருந்தார். லோகோவைக் கண்ணுற்ற கலைஞரின் முகத்தில் திருப்தி தெரிந்தது. ஆனால், மாறன் அவர்கள் லோகோ எழுத்துகள் நேர்க்கோட்டில் இல்லையோ என்று ஐயம் தெரிவித்தார்.

நான் அதைத் தெளிவுபடுத்துவதற்குள் கலைஞர் குறுக்கிட்டு, “மி’ என்கிற எழுத்து மேலே சுழிக்கப்படுகிறது. அதற்கு அடுத்து வரும் ‘ழ’ நேர்க்கோட்டிலிருந்து கீழே சுழிக்கப்படுகிறது. அடுத்தடுத்து இப்படியான எழுத்துகள் அமைந்து விடுவதால் அது நேர்க்கோட்டில் இல்லாதது போல் தோன்றுகிறது. ஆனால், இது சரியாகவே இருக்கிறது…” என்றதுடன் நில்லாமல் ஒரு ஸ்கேலை எடுத்து பக்கவாட்டில் வைத்து அது நேர்க்கோட்டில் இருப்பதை உறுதி செய்தார். நான் தெளிவுபடுத்த வேண்டிய வேலை அது. அந்த வேலையையும் அவர் எனக்கு வைக்கவில்லை.

பிறகு லோகோவை என் கையில் கொடுக்க வந்தவர் ஏதோ நினைவுக்கு வந்தவராக என்னிடம், “இந்த முதலெழுத்து ‘த’வுக்கு முன்னால் ஒரு கோபுரம் வைத்தால் எப்படி இருக்கும்..?” என்றார். அதுதான் ஒரு லோகோவுக்கான லட்சணம். “சிறப்பாக இருக்கும் ஐயா…” என்றேன். ஒரு கணம் யோசித்தவர், “தஞ்சைப் பெரிய கோவிலின் கோபுரம் வையுங்கள். கம்பீரமாக இருக்கும்..!” என்றார்.

சொன்னதுடன் நிற்காமல் அங்கிருந்த நூல்களில் தேடி ஒன்றை எடுத்து, பக்கங்களைப் பிரித்து அந்த தஞ்சைப் பெரிய கோவில் கோபுரத்தைப் பிடித்து விட்டார். அதை என் கையில் கொடுத்து இதைப் பிரிண்ட் போட்டு இந்த எழுத்துகளில் வைத்துக் கொண்டு வாருங்கள்…” என்றார். அதுவும் நான் செய்திருக்க வேண்டிய வேலை. என் வேலை அவரால் எளிதானது.

நான் வாங்கிக்கொண்டு வெளியேறும் நேரம் “கொஞ்சம் சீக்கிரம் முடிச்சிட்டு வாங்க சார். கிளம்பணும்..!” என்றார். அந்த “சார்…” என்ற சொல்லைக் கேட்டு ஆடிப் போனேன். நான் அப்போது சின்னைப் பையனாகத்தான் வயதிலும், உருவத்திலும் இருந்தேன்.

“சீக்கிரம் முடிச்சிட்டு வாப்பா…” என்றிருந்தாலே அது அன்பின் உச்சம். ஆனால், ஒரு கலைஞனை இப்படித்தான் மதிக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ..?

இப்படி ஒரு முதலாளி… ஒரு தனிப்பெரும் இயக்கம் மட்டுமல்லாமல் இணையில்லா ஒரு இனத்துக்கும் தலைவன்… வேறு யாருக்கு உலகில் வாய்க்கும்..? அவரைப் பத்திரிகைத் தொழில் நிமித்தம் சந்தித்த பேறும் எத்தனைப் பேருக்கு வாய்த்திருக்கும்..?

நாலுகால் பாய்ச்சலில் கேமரா ரூமுக்கு ஓடிச்சென்று பெரிய கோவில் கோபுரத்தை பிரிண்ட் போட்டுக் காயவைத்து லோகோவில் வைத்துக் கொண்டு வந்தபோது அறையைவிட்டு வெளியே வந்து நின்றுகொண்டு கிளம்ப ஆயத்தமாக இருந்தார். நான் காட்டிய ‘லோகோ’வைக் கண்டு திருப்தியடைந்தவராகக் காரில் ஏறிக் கிளம்பினார்.

ஒரு ஓவியனாக, ஒரு ஆசிரியனாக, ஒரு உதவி ஆசிரியனாக… ஒரு ‘லோகோ’ என்றாலும் அது இப்படித்தான் வரவேண்டும் என்கிற படைப்பாளியாக… அதன் நேர்த்தி குறித்து சிந்தித்த கலைஞனாக, அப்படி உருவாகத் தானே தன் கையால் அனைத்தையும் செய்து கொடுத்த உழைப்பாளியாக… ஒரு ஓவியனை மதிக்கத் தெரிந்த உயர்ந்த பண்பாளராக… இப்படி அந்த ஓரே நிகழ்வில் பல முகங்களை அந்தத் தலைவனிடம் ஒருசேரப் பார்த்தேன் நான்.

அந்த அரிதான ஆசானுக்கு, உன்னதத் தலைவனுக்கு என் தலை தாழ்ந்த சிறிய வணக்கம் இந்த அவரது பிறந்த நாளில்…

1992 -ம் ஆண்டு பொங்கல் முதல் அப்துல் ரகுமான் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளியான ‘தமிழன்’ நாளேட்டில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் சுகுமாரன், எழுத்தாளர் தமிழ்மகன் போன்றோர் உதவி ஆசிரியர்களாக இருந்தார்கள்.

தமிழில் அப்போது வெளியாகிக் கொண்டிருந்த அனைத்து நாளேடுகளும் கருப்பு, வெள்ளையில் வந்தபோது ‘தமிழன்’ நாளேடுதான் முதன்முதலில் எல்லா பக்கங்களும் வண்ணத்தில் வெளிவந்தது. இப்போதைய எல்லா வண்ண நாளேடுகளுக்கும் ‘தமிழன்’ முன்னோடியாக இருந்தது என்றால் அது மிகையாகாது.
.
ஆனால், ‘தமிழன்’ தலையெழுத்தை (லோகோ) கலைஞரின் ஆணைப்படி நான் எழுதினேன் என்றால் அது கண்டிப்பாக மிகைதான்..!

– வேணுஜி, ஆசிரியர் http://gtamilcinema.com/

Leave a Response