
மேற்கு வங்க மாநிலத்தில் 1ம் வகுப்பு முதல் வங்காள மொழி படிப்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.
நாடு முழுவதும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க மோடி அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகம், கேரளா, மேறுகுவங்கம், ஒரிஸா உள்ளிட்ட சில மாநிலங்களில் இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக முன்னணிப் படையாக நாட்டிற்கே வழிகாட்டிய வரலாறெல்லாம் 1930களிலும், 1960-களிலும் தமிழகத்தில் நிகழ்ந்தேறியவைதான்.
இந்நிலையில், திங்கட்கிழமை (மே 15ம் தேதி) கல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த மேற்குவங்கக் கல்வித்துறை அமைச்சர் பார்த்த சட்டார்ஜி, அனைத்துப் பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் வங்காள மொழி படிப்பது கட்டாயமாக்கப்படுவதாக தெரிவித்தார்.
ஆங்கில வழிப் பள்ளிகளில் வங்காள மொழியையும் கற்பிப்பதை கட்டாயமாக்கும் வகையில் இந்த முடிவை மேற்குவங்க அரசு மேற்கொண்டுள்ளது. ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் தாய் மொழியான வங்காளத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதுடன், வங்காளத்தில் சரிவர படிப்பதற்கும் ஆர்வமற்றவர்களாய் உள்ளதால் இந்த உறுதியான முடிவை மேற்குவங்க அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மும்மொழிக் கல்வி கொள்கை அடிப்படையில், முதல் இரு மொழிகளாக ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் தேர்ந்தெடுத்து படிக்கலாம் என்ற போதிலும், 3வது மொழியாக வங்காளத்தை கட்டாயமாகப் படிக்க வேண்டும் என பார்த்த சட்டார்ஜி தெரிவித்துள்ளார்.
மத்தியகல்வி வாரியப் பட்டியலில் உள்ள பள்ளிகளில் இந்தியைத் திணிக்க மத்திய அரசு தீவிரமாக முயலும் வேளையில் அதற்கு மிகப்பெரிய தடைக்கல்லைப் போட்டிருக்கிறார் வங்கமுதல்வர் மம்தா.


