கிளிநொச்சி- பூநகரி பகுதியில் சட்டத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சரினால் சுற்றிவளைக்கப்பட்டு, அள்ளப்பட்ட மணல் மீண்டும் அள்ளப்பட்ட இடத்திலேயே கொட்ட வைக்கப்பட்ட சம்வம் சனவரி 28 அன்று நடைபெற்றிருக்கின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி பகுதியில் கடந்த 4 வருடங்களாக மணல் அகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அதிகளவு உழவு இயந்திரங்கள் மற்றும் கனரக வாகனங்களில் மணல் ஏற்றப்பட்டது.
இதுதொடர்பாக மக்கள் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து மணல் அள்ளப்பட்டுக் கொண்டிருக்கும்போதே சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர், அங்கே மணல் அள்ளியவர்களின் அனுமதிப் பத்திரத்தை சோதனையிட்டார்.
இதன்போது அதில் உயிலங்காடு என்ற இடத்தில் மணல் அள்ளுவதற்கான அனுமதி பெற்ற ஒருவர் மணித்தலை பகுதியில் அள்ளிக் கொண்டிருப்பது சட்டத்திற்கு மாறானது என சுட்டிக்காட்டிய அமைச்சர், அள்ளப்பட்ட மணல் முழுவதனையும் அள்ளப்பட்ட இடத்திலேயே மீண்டும் கொட்டவைத்தார்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த அனுமதிப் பத்திரம் தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
அவ்வாறான அனுமதிப் பத்திரத்தை தாங்கள் வழங்கவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபை மறுத்துள்ள நிலையில் கனியவளங்கள் அமைச்சிடமிருந்து மணல் சட்டத்திற்கு மாறாக அனுமதிப்பத்திரத்தை பெற்று இவ்வாறான கொள்ளை இடம்பெறுவதாக இன்றைய தினம் அம்பலத்திற்கு வந்துள்ளது.