
பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் உடல்நலக் குறைவால் சென்னையில் மார்ச் 23 அன்று காலமானார். அவருக்கு வயது 86.
பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன், சென்னை வேளச்சேரியில் வசித்துவந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மார்ச் 23 அன்று இரவு 8 மணி அளவில் வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
அசோகமித்திரனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி, 3 மகன்கள் உள்ளனர். மகன் டி.ராமகிருஷ்ணன், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் மூத்த பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார்.
ஆந்திர மாநிலம் செகந்திரா பாத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர் அசோகமித்திரன். இயற்பெயர் ஜ.தியாகராஜன். தந்தை ரயில்வே குமாஸ்தா. 1952-ல் தந்தையின் மரணத்துக்குப் பிறகு சென்னையில் குடியேறினார். பின்னர், ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றினார். 1956-களில் எழுதத் தொடங்கினார். ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிய அனுபவங்கள் அடிப்படையில் ‘மை இயர்ஸ் வித் பாஸ்’ என்ற ஆங்கில நூலை எழுதினார்.
கணையாழியில் ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
8 நாவல்கள், 250 சிறுகதைகள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள், ஏராளமான மொழிபெயர்ப்புகள், பத்தி எழுத்து எனப் படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வந்தவர் அசோகமித்திரன்.
அப்பாவின் சிநேகிதர்’ தொகுப்புக்காக 1996-ல் சாகித்ய அகாதமி விருது, டால்மியா மத நல்லிணக்க விருது, தேவன் விருது, தமிழக அரசின் திரு.வி.க. விருது, சாரல், இலக்கியச் சிந்தனை, அக்ஷரா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
வேளச்சேரி சாஸ்திரி தெரு பாபாஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள், நண்பர்களின் அஞ்சலிக்குப் பிறகு, பெசன்ட் நகர் மயானத்தில் (மார்ச் 24) இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.
