
மன்னார்குடியில் எடுக்கப்பட இருக்கும் மீத்தேன் குறித்து இதுவரை பேசாத , சாராய ராஜ்யத்தை விரிவுபடுத்திய சசிகலா முதலமைச்சராகும் பேராசையை நடைமுறைப்படுத்த முனைகிறார். தனது தொகுதியில் வர இருக்கும் நாசகார ‘நியூட்ரினோ’ திட்டத்தை எதிர்த்து வாய்திறக்காத மற்றும் அத்திட்டத்தை எதிர்த்து போராடிய தோழர்.முகிலனை கடுமையாக தாக்கிய ஓபிஎஸ் இன்று புத்தர் போல காட்சியளிக்கிறார்.
சசிகலாவை அம்பலப்படுத்தியதற்காக அதிகபட்சம் ஓபிஎஸ்சுக்கு ஒரு ’தம்ஸ்-அப்’ பாராட்டு சிம்பல் போடலாம்.. பாஜகவின் வலையுள் மாட்டும் சசிகலாவிற்கு ’எல்லாம் போச்சா’ன்னு ஒரு ஸ்மைலி போடலாம். அதைத்தாண்டி எந்த அங்கீகாரத்திற்கும் தகுதியுடையவர்கள் அல்ல இவர்கள்.
இரண்டும் ஒன்றை ஒன்று அம்பலப்படுத்திய பிறகு ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை ‘தீபாவிற்கோ’ அல்லது இன்ன பிற ப்ராக்ஸிகளுக்கோ தாரைவார்ப்பது படு முட்டாள் தனம்.
புதிய அரசியல், முன்னேற்ற அரசியல், நேர்மை அரசியல், இளைஞர் அரசியல் என்று பல டயலாக்கில் பேசப்படும் ’அரசியல்’ ஓபிஎஸ்ஸிடம் இருந்தோ, சசியிடமிருந்தோ, தீபாவிடமிருந்தோ வரப்போவதில்லை. தமிழ்நாடு எனும் பெரும் சொத்தை கொள்ளையடிக்கும் ஒப்பந்தத்திற்கு நடைபெறும் போட்டி இது.
இச்சமயத்தில் தான் ’மக்கள் அரசியல்’ வலுப்பெற வேண்டும். நமக்கான அரசியலை நாம் தான் உருவாக்க வேண்டும். முதலமைச்சரை நம்பியோ, அமைச்சர்-எம்.எல்.ஏக்களை நம்பியோ நாம் அன்றாட வாழ்க்கையை நடத்தியதில்லை. நம்முடைய கோரிக்கையை கேட்டு அவர்களும் ஆட்சி நடத்தியதில்லை. அப்புறம் எதுக்கு இந்த ’பீலீங்ஸ்’ நமக்குன்னு ஒருமுறை கேட்டுப்பாருங்க..
இங்கே இருக்கும் தண்ணீர் பிரச்சனை, ரேசன்கடை பிரச்சனை, மின்சாரப்பிரச்சனை, விலைவாசி பிரச்சனை போன்றவற்றிலிருந்து காவேரி-நியூட்ரினோ-மீத்தேன் – கெயில் என எதையாவது இந்த கும்பல் தீர்த்து வைக்கும் என நம்புகிறீர்களா?..இதுல நேத்திக்கு உச்சிகுடுமி நீதிமன்றம் ஏழு தமிழர்களை விடுதலை செய்யரதுக்கு தடை போட்டிருக்கு… இப்படி ஆயிரத்தெட்டு பிரச்சனை நமக்கிருக்கு.
இந்த சாக்கடையை, கழிசடைகளை சுத்தம் செய்வது நம் பொறுப்பு. அதை வேறொருவரிடம் விட்டுச் செல்லும் சோம்பேறித்தனமும், அக்கரையற்றத் தனமும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
சரி, அப்படின்னா… இந்த வெற்றிடத்துக்கு என்னதான் பதில்ன்னு கேப்பீங்க..
இப்போ தானே ‘சல்லிக்கட்டு’ போராட்டத்துக்கு வீதிக்கு வந்து சாதிச்சீங்க…அதுக்குள்ள மக்கள் போராட்டத்தோட வீரியத்தை மறந்துட்டீங்களா?… வீதிக்கு நாமெல்லாம் வந்த பின்னாடி தானே எல்லாரும் டில்லிக்கு ஓடினாங்க, டில்லிக்காரனும் பதறுனான். இன்னிக்கு சல்லிக்கட்டு நடக்குதுன்னா அது மோடியோ, ஓபிஎஸ்ஸோ, சசிகலாவோ வாங்கி கொடுத்ததா?.. நம்ம மாணவனும், இளைஞரும் வாங்கிய உரிமை அது.. தேர்தல்ல நின்னு அந்த உரிமைய வாங்கி தரலை.. வீதில நின்னு தான் இதை சாதிச்சாங்க.. அதை எப்படி மறந்துட்டீங்க?…
இப்போ தானே காவல்துறை-அதிகாரிகள் பத்தி கத்துகிட்டீங்க… இப்போ தானே குடும்பத்தோட போராட்டத்துக்கு போக ஆரம்பிச்சீங்க.. இப்போ தானே நண்பர்களோடு போராட்டத்துல முழக்கம் போட்டீங்க… இப்போ தானே நீங்களே மாற ஆரம்பிச்சிருக்கீங்க…. நடக்க ஆரம்பிச்ச உடனே மாரத்தான் ஓட முடியுமா?… தொடர்ந்து போராட்டம் நடத்த, நடத்த இந்த அரசியல்வாதிகளுக்கு கண் முளைக்கும், காது கேட்கும். போராட்ட குரல் சத்தமா கேட்டாதான் இவங்க வேலை பார்ப்பாங்க..
அப்டின்னா ’..நாமளே தேர்தல்ல நின்னு அதிகாரத்தை கைப்பத்துனா மாற்றம் வராதா பாஸ்ஸு’ன்னு கேப்பீங்க.. ‘நம்ம ஆளுங்க சின்னத்துக்கு ஓட்டு போட்டு பழகுனவுங்க.. அதுமட்டுமில்ல, எது சரியான அரசியல்னு அவங்களுக்கு நீங்க சொல்லிக்கொடுக்காம எப்படி அவங்க சரியா ஓட்டு போடுவாங்க?.. ‘… இன்னிக்கும் நாம ‘எந்திரன்’ படத்துக்கு தானே முதல் வரிசைல நிக்கிறோம், ‘விசாரணை’ படத்துக்கா வரிசைல நிக்கிறோம்?.. அது மாதிரி தான்.. தேர்தல்ங்கரது ஒரு வித்தை. அதுல டாக்டர் டிகிரி வாங்கின கும்பலோட நாம போட்டி போடரதுக்கு முன்னாடி மக்களை அரசியல் படுத்தனும். எது யோக்கியமான அரசியல், எது மக்களுக்கு நல்லது பண்ணும்னு சொல்லிக்கொடுக்காம எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துட முடியாது. வெள்ளைக்காரன் காலத்துல இருந்து இன்னிக்கு இருக்குற மணல் கொள்ளையன் வரை எதிர்த்து போராடுற ‘நல்லகண்ணு’ அய்யாவுக்கே நம்ம ஆளுங்க டெப்பாசிட் வாங்குற அளவுக்கு ஓட்டு போட மாட்டாங்க.. இவ்வளவு ஏன் சுபாஸ் சந்திரபோஸோ, பிரபாகரனோ, பெரியாரோ, பகத்சிங்கோ தேர்தல்ல நின்னுருந்தா கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. நம்ம தேர்தல் களம் அப்படிப்பட்டது. ஏன்னா, எந்த அரசியல்வாதி ஜெயிக்கனும்னு முடிவு பண்ணுரது நாம இல்லை, இங்க இருக்குற அரசு அதிகாரிகள். அந்த உள்குத்தை புரிஞ்சுக்கிறதுக்கு இன்னும் கொஞ்சம் படிக்கனும். அதையும் செய்வோம்.
போராடரதுக்கு சோம்பேறித்தனப் பட்டோம்னா.. சசிகலாவோ, இளவரசியோ, திவாகரனோ, ஓபிஎஸ்ஸோ, தம்பிதுரையோ, தீபாவோ மாதிரிதான் நமக்கு கிடைப்பாங்க.. இந்த பிடல் காஸ்ட்ரோ மாதிரியோ, நேதாஜி மாதிரியோ, பிரபாகரன் மாதிரியோ கிடைக்கனும்னா கொஞ்சம் உழைக்கனும், கொஞ்சம் கஸ்டப்படனும். ஈசியா தீர்வு தர்ரதுக்கு அரசியல்ல ‘சாரிடோன்’ மாத்திரை இல்லை சார்.
அதுனால, முதல்ல போராட்ட களத்துக்கு வாங்க, இயக்கமாக மாறுங்க.. இவ்வளவு சொல்லி சசிகலாவை அம்பலப்படுத்துன ஓபிஎஸ், ஏன் GST பில்லுல கையெழுத்து போட்டாங்கன்னு சொல்லல.. இந்த திட்டம் தமிழகத்துக்கு சீரழிவை தரும்னு எல்லாருக்கும் தெரியும், ஏன், ஜெயலலிதாவுக்கே தெரிஞ்சதுனால தான் எதிர்த்தாங்க… இதே மாதிரி தான் ‘உதய் திட்டம்’ , ‘ரேசன்கடையை மூடப்போகும் திட்டம்’ ‘ இப்படின்னு பெரிய பட்டியல் இருக்கு சார்… இதையும் சேர்த்து அவர் அம்பலப்படுத்தி இருந்தா அவர ரொம்ப ‘நல்லவர்னு’ சொல்லலாம்.
இந்த ஓபிஎஸ்-சசிகலா சண்டைங்கரது பரோட்டாவுக்கும்-சால்னாவுக்கும் நடக்கற சண்டை… ரெண்டுபேரும் சேர்ந்து தான் கொள்ளை அடிச்சாங்க.. இப்ப ரெண்டு பேர்ல யாரு கொள்ளைகூட்ட தலைவர்னு சண்டை போடராங்க.. ரெண்டையும் பிச்சு போட்டு சாப்புட்டு ஏப்பம் விடுரது தான் நமக்கான வேலை.
இப்போ தான் ’அரசியல் அதிகாரம்’ எனும் ’பண்டம்’ இந்த காட்டாட்சி கும்பலிடம் இருந்து மக்களாகிய நம்மிடம் வந்திருக்கு. திரும்பவும் கொண்டு போய் கொரில்லா செல்லுல அடைக்கனும்னு சொல்றீங்களே நியாயமா?.. அவ்ளோ வீக்கான ஆளா நாம ஏன் இருக்கனும்?.
இயக்க அரசியலை கைக்கொள்வோம், அரசியல் கட்சிகளை புறக்கணித்து ‘ மக்கள் பிரச்சனைகளை’ பொதுவெளியில் பேசுவோம். மக்கள் பிரச்சனைகளுக்காக திரள்வோம். அப்படி திரண்டீங்கன்னா, ரெண்டு கும்பலும் மோடி சர்க்காரோட சேர்ந்து ‘லத்தில’ நம்மள அடிப்பானுக.. அப்போ தெரியும் இவங்களோட உண்மையான முகம் என்னான்னு ? இவங்க யாருன்னு… நாம ஒன்னா நின்னா, அவிங்க ஒன்னாயிருவானுக.. நாம பிரிஞ்சா அவிங்களுக்குள்ள ரேக்ளா ரேஸ் வைச்சு நம்மள கைதட்ட விடுவானுக….
பாஸ், அவிங்க பிரச்சனை அவிங்களுக்கு.. நம்ம பிரச்சனை நமக்கு.
அதுக்கு முன்னாடி. 6, 7 நாளா இரவு பகலா, வெயில்- பனில நின்னு போராடி சல்லிக்கட்டு உரிமையை முன்னுக்கு நகர்த்திய இளைஞர்கள் – மாணவர்கள் மற்றும் அவர்களை பாதுகாத்ததுக்காக இன்னிக்கு வரைக்கும் காவல்துறையிடம் அல்லல்படும் மீனவ குப்பத்து மக்களையும் ‘உச்சி முகர்ந்து’ வாழ்த்துவோம்,அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து ‘நாம் துணையாய் இருக்கோம்னு’ சொல்ல நாமெல்லாம் ஒன்னா கூடுவோம் வாங்க..


