மியாவ் – திரைப்பட விமர்சனம்

ஒருசில கதைகளுக்கு மட்டும்தான் எவ்வளவு முறை சொல்கிறோம் என்பதைத்தாண்டி எப்படிச் சொல்கிறோம் என்பதில் அதன் வெற்றி அமையும். அவற்றில் பழிவாங்கும் கதைகளும் அடக்கம்.

வழக்கமான பழிவாங்கும் கதையில் ஒரு புதுமையைப் புகுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் மியாவ்.

தாந்தோன்றித்தனமாகச் சுற்றித்திரியும் நான்கு இளைஞர்கள், தெனாவெட்டின் உச்சத்தில் ஓர் இளம்பெண்ணைச் சீரழித்துக் கொன்றுவிடுகின்றனர்.

அப்பெண்ணின் ஆவி ஒரு பூனையின் உடலில் புகுந்துகொண்டு அவர்களுக்குப் பாடம் புகட்டுகிறது.

ராஜா, சஞ்சய்மிக்கி, ஹேடன்குமார் உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்திருக்கின்றனர்.

ஊர்மிளாகாயத்ரி நல்ல தேர்வு. இந்தப்படம் அவருக்குப் பலமாக அமையும்.

செல்ஃபிபூனை வருகிற காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றமில்லை. கிராபிக்ஸ் காட்சிகள் என்பதையும் தாண்டி செல்ஃபிபூனையின் வெற்றியை ரசிக்கமுடிகிறது.

ஒளிப்பதிவாளர் போஜன் கே.தினேஷின் உழைப்பு படத்துக்குப் பக்க பலமாக அமைந்திருக்கிறது. ஸ்ரீஜித்தின் இசையில் ஏற்கெனவே ஹிட்டடித்த இங்கி பிங்கி, க்யூட் லிட்டில் பொண்ணு ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை ஓ.கே.

தயாரிப்பாளர் வின்செண்ட் அடைக்கலராஜ், கதையை நம்பித் தாரளமாகச் செலவழித்திருப்பது படத்தில் இருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் சொல்கின்றன.

இயக்குநர் சின்னாஸ்பழனிச்சாமி, ஓர் விளம்பரப் பட இயக்குநர் என்பது காட்சிகளைப் பார்க்கும்போதே தெரிகிறது. கொஞ்சம் அசந்தாலும் சறுக்கி விட்டுவிடக்கூடிய திரைக்கதையை எடுத்துக் கொண்டதற்காகவே அவரைப் பாராட்டலாம்.

ஏற்கேனவே நாய், குரங்கு, ஈ ஆகியனவற்றை முதன்மைப் படுத்திய படங்கள் குழந்தைகளுக்குப் பிடித்துப் போனதால் பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன.

செல்ஃபிபூனையின் புண்ணியத்தில் இந்தப்படமும் அந்த வரிசையில் சேரும் வாய்ப்பிருக்கிறது.

Leave a Response