குமரிமுனையில் தமிழ்ப்பெருமிதம் மறைக்க சூழ்ச்சி – அறிவுமதி ஆவேசம்.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ரூ.15 கோடி மதிப்பில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமாயண கண்காட்சிக் கூடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜன.12இல் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
இதுதொடர்பாக, குமரி விவேகானந்த கேந்திர துணைத் தலைவர் ஏ.பாலகிருஷ்ணன், விவேகவாணி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ராமாயண கண்காட்சிக் கூடத்தின்
வடிவமைப்பு ஓவியர் பாஸ்கரதாஸ் ஆகியோர், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
குமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் சுமார் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.15 கோடி மதிப்பில் ராமாயண கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரதமாதா கோயில் மற்றும் வீர ஆஞ்சநேயர் சிலை ஆகியன இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. முழு ராமாயணமும் 108 நிகழ்வுகளாக ஆறு அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட அளவில் ஓவியங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இக் கண்காட்சிக் கூடத்தின் முகப்பில் 27 அடி உயரத்திலான வீர ஆஞ்சநேயர் சிலையும், மண்டபத்தின் மேல் மாடியில் வெண்கலத்தாலான 15 அடி உயர பாரதமாதா சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
அதனுடன் 18 அடிக்கு 12 அடி அளவிலான மூன்று சித்திரங்களில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தையும், ராமேசுவரத்தில் ஸ்ரீராமர்-சீதா சிவலிங்க பிரதிஷ்டை செய்யும் காட்சியும், திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமியின் அனந்த சயனக் காட்சியும் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓவியங்கள் அனைத்தும் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் கெட்டுப்போகாத வகையில் பிரத்யேக பெயிண்டால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வளாகத்தினுள் 12 அடி உயர சிவபெருமான் சிலை, சிற்பங்கள், அலங்காரப் பூங்கா, நீரூற்று கிருஷ்ணன் சிலை ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. உலக அமைதி, ஒற்றுமை ஏற்பட வேண்டி இந்த கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவை முன்னிட்டு, ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை ராமாயணம் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரபல ராமாயண சொற்பொழிவாளர் மொராரிபாபு இதில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்: இந்த ராமாயண கண்காட்சிக் கூடத்தை விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கிறார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

குமரி முனையில் வள்ளுவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தைக் குறைக்கும் திட்டத்துடனே இது நடப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக பாவலர் அறிவுமதி,

வடக்கே வள்ளுவச்சாமியார்
மோசமான
இலக்கணமற்ற
சிலை திறந்ததாக
நடிப்பு
தெற்கே
தமிழ் முனை குமரி முனை
வள்ளுவர்
நிமிர்ந்து நிற்கிற
தமிழ்ப் பெருமிதம் மறைக்க
சிவன்
ஆஞ்ச நேயர்
இராமாயண
சூழ்ச்சித்
திணித்தல்!!!!

விழிக்க மறந்தால்
நிரந்தர
அடிமைகள்தாம்!!
என்று எழுதியிருக்கிறார்.

குமரிமுனை என்பது சங்ககாலம் தொட்டு தமிழ் அடையாளமாகத் திகழ்கிறது. அதை மாற்றி குமரிமுனையை இந்துமுனையமாக மாற்ற இந்துத்துவ சக்திகள் முயல்கின்றன என்றும் அதைத் தடுக்க குமரியில் தமிழர்களது விழுமிய வரலாற்றுக் கண்காட்சி வளாகம் ஏற்படுத்த முயல வேண்டும் என்றும் அதை உடனே செய்யவேண்டும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Leave a Response