25 வருடங்களுக்கு முன்பே சிம்புவிடம் கருத்து கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!


கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படம் வெளியாகி இருப்பதை முன்னிட்டு சிம்பு கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி நெகிழ்வாக நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறார்.

கண்டிப்பாக கௌதம் மேனனும் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒவ்வொரு படத்துக்கும் சிறப்பாகவே உழைக்கிறார்கள். ஆனால் என் படம் என்று வந்தால் சற்று கூடுதல் முயற்சியை போடுகிறார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களிடம் நான் கூடுதல் அன்பை உணர்கிறேன்.

என்னைப் பல சர்ச்சைகள் சுற்றியிருந்தபோதிலும், ரஹ்மான் எனக்கு ஆதரவு அளித்தார், அது குறித்து என்னுடன் பேசவோ, அதுபற்றி கருத்து கூறவோ இல்லை. என்னை சிறுவயதிலிருந்தே அவருக்குத் தெரியும். சிறுவனாக இருக்கும்போது நான் அவரை பல முறை தொந்தரவு செய்துள்ளேன். ஆனால் அவர் என்னிடம் எப்போதும் கனிவாகவே இருந்துள்ளார். அன்பாகவே நடத்தியுள்ளார்.

தனது ஆம்னி வண்டியில் ’ரோஜா’ படத்தில் தான் போட்ட முதல் பாடலை என்னிடம் அவர் போட்டுக்காட்டியது இன்னும் என் நினைவில் உள்ளது. நான் சிறுவனாக இருந்தபோது என்னிடம் கருத்து கேட்டார். இந்த பணிவு தான் அவருடைய இன்றைய உச்ச நிலைக்குக் காரணம் என நினைக்கிறேன். ஒரு இசையமைப்பாளராக அல்ல, ஒரு மனிதராக அவரிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன்” என கூறியுள்ளார் சிம்பு.

Leave a Response