2007, நவம்பர் 2 காலை ஆறு மணியளவில் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இறக்கும்போது தமிழ்ச்செல்வனுக்கு மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இருந்தனர்.
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நவம்பர் 5 இல் கிளிநொச்சியில் இடம்பெற்றது. வீரவணக்கக் கூட்டத்தில் வன்னி எங்கிலுமிருந்து திரண்ட மக்கள், விடுதலைப் புலிகளின் துறைப் பொறுப்பாளர்கள், கட்டளைத் தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், சைவ- கிறிஸ்தவ மதகுருமார்கள், ஆயர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கிளிநொச்சி நகரிலிருந்து கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலை 6:00 மணிக்கு விடுதலைப் புலிகளின் முழுப்படைய மதிப்புடன் அவரது உடல் விதைகுழியில் விதைக்கப்பட்டது.
சு. ப. தமிழ்ச்செல்வனின் இறுதி உரையில்,
“ தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.
இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம்.” என்று சொல்லியிருந்தார். அவருடைய கூற்று இன்றுவரை பொருத்தமாக இருக்கிறது.
அவருடைய நினைவுநாளை ஒட்டி, நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள குறிப்பில்,
படையணித் தலைவர்
நம் அண்ணன் சுப.தமிழ்செல்வன்
(அரசியல் பிரிவு பொறுப்பாளர் – விடுதலைப் புலிகள்)
நினைவுநாள் (02-11-2016) – வீரவணக்கம்
====================================
உணர்வை இழந்து,
உரிமையையும் இழந்து,
அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக,
மக்கள் படை கட்டிப் புரட்சி செய்த
மாபெரும் தலைவனின் தளபதி!
அன்னை தமிழீழத்தில்
அவன் அரசியல் துறையின் பொறுப்பு!
நிதியும் கூட அவன் இருப்பு!
அனைத்திலும் நிர்வாகம் மிகச்சிறப்பு!
மண்ணின் விடுதலைக்காக
மகிழ்ச்சியோடு மரணத்தைத் தழுவிய
மாவீரர்கள் வரிசையில் மகத்தானவன்!
தன் இன்சொல்லால்,
புன்சிரிப்பால்
அன்பின் வேரை அனைத்துலகிற்கும் பரப்பியவன்!
சந்தனப்பேழை
அவன் சமாதானத்தின் தூதுவன்
சரித்திர நாயகன்
பன்னெடுங்காலமாக
தமிழ்த்தாய் தவமிருந்து பெற்ற தவச்செல்வன்
நம் அண்ணன்
சுப.தமிழ்ச்செல்வன் அவர்களினுடைய நினைவுநாள் இன்று (02-11-2016)
தாயக விடுதலை என்ற புனிதக்கனவைச் சுமந்து பூமியில் விதையாய் விழுந்த
அந்த மாவீரனின் நினைவை
ஒவ்வொரு தமிழனும்
தன் நெஞ்சில் ஏந்துவோம்!
அவன் கனவை நிறைவேற்ற
இந்நாளில் நாம் உறுதியேற்போம்!
பெருமிதத்தோடும், திமிரோடும்
அந்த மாவீரனுக்கு
நம் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
என்று சொல்லியிருக்கிறார்.