இந்துமுன்னணிக்கு எதிராக வீரத்தமிழர்முன்னணி உருவாகிறது.

இந்துமுன்னணி தமிழர்களை இந்துக்களாக ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு எதிர்வினையாக  நாம்தமிழர்கட்சியின் துணை அமைப்பாக வீரத்தமிழர் முன்னணி என்கிற அமைப்பு தொடங்கப்படுகிறது. நாம்தமிழர்கட்சியின் பொதுக்குழுவில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வழிபாட்டில் ஆர்வம் காட்டும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் புத்திசாலித்தனமான முயற்சி என்று பலராலும் போற்றப்படுகிறது.

அந்தத் தீர்மான விவரம்….

பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது என்பதை நடுகல் மரபினராகிய நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். இயற்கை வழிபாட்டை நாங்கள் ஏற்கிறோம். பகவத் கீதையையோ, பைபிளையோ, குரானையோ எங்களுக்கான வேதமாக நாங்கள் ஏற்க வில்லை. உலகப் பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்; எங்கள் வழிபாடு இயற்கை; எங்கள் தெய்வங்கள் முன்னோர்கள். பெரும்புகழ் இறையோன் முருகன், வாழ்வியல் நெறிகட்டி வள்ளுவப் பெருந்தகை, தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம்  கண்ணகி,வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டும், எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன்,அருண்மொழிச்சோழன்,அரசேந்திர சோழன்,பூலித்தேவன்,தீரன் சின்னமலை,வேலு நாச்சியார்,பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தியும் வரும் தைப்பூச நாளில் புதிய எழுச்சிக்கு நாம் தயாராகப் போகிறோம். ஆம். வரும் தைப்பூச நாளில் தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்கவும் வீரத்தமிழர் முன்னணியைத் தொடங்க இருக்கிறோம். வலிமைமிகுந்த தம்பிகளின் மார்தட்டலில் எழுச்சியோடு தொடங்கப்பட இருக்கும் வீரத்தமிழர் முன்னணி தமிழ்ப் பண்பாட்டுக் காவல் அரணாகத் தீரத்தோடு செயல்படும்.

Leave a Response