தமிழகத்தில் அதிமுக வுக்கு திமுக ஆதரவு – அதிர்ந்து நிற்கிறது பாஜக

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலமின்மையைச் சுட்டிக் காட்டி, அதனால் நிர்வாகத்தில் ஒழுங்கற்ற நிலை இருப்பதாகவும் கூறும் சுப்பிரமணியன்சுவாமி, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசில் ஒழுங்கற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல் செயல்படத் தொடங்கியுள்ளது.

மேலும், எஞ்சிய விடுதலைப்புலிகள் மற்றும் நக்சலைட்டுகள் ஆதரவு இயக்கங்கள் தலைதூக்கியுள்ளன. அதாவது தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திட்டமிடப்படுகிறது.

எனவே, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்குத் திரும்பும் வரை, தமிழகத்தில் அரசியல்சாசனச் சட்டப்பிரிவு 356-ஐ அமல்படுத்தி (குடியரசுத் தலைவர் ஆட்சி) சட்டப்பேரவையை முடக்கி வைக்க வேண்டும். மேலும் தெற்கு மாவட்டங்களிலும் சென்னையிலும் ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை 6 மாதங்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வலியுறுத்துகிறேன்.

முதல்வர் ஜெயலலிதா இன்னும் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளதையடுத்து மேற்கூறிய நடவடிக்கைகள் அவசரமானது” சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இதற்கு அதிமுக தரப்பில் இருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை. ஆனால் திமுக ஆதரவாளரான சுபவீ இதற்குக் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார். அவருடைய வலைப்பக்கத்தில் இதுகுறித்து அவர் எழுதியிருப்பதாவது,

சுப்ரமணிய சுவாமியால் சும்மா இருக்க முடியாது. ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக் கொண்டே இருப்பதும், அதன்மூலம் மலிவான விளம்பரம் தேடி, தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதும் அவர் வழக்கம். தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்னும் புதிய வெடிகுண்டுடன் புறப்பட்டுள்ளார் இப்போது.

கடந்த 22ஆம் தேதி சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா இன்னும் அங்குதான் உள்ளார். இன்று இரவோ, நாளையோ வீடு திரும்பி விடுவார் என்றுதான் முதலில் சொன்னார்கள். பிறகு, “உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம், இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார்” என்று மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் எழுத்து மாறாமல் அதே “உண்மைச் செய்தியை”க் கூறிக் கொண்டிருந்தனர். இப்போது கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. சுவாசக் கோளாறு, இருதய சிகிச்சை, நோய்த் தொற்று, சர்க்கரை நீர் முதலிய சிக்கல்கள் இருப்பதால், மருத்துவமனையில் நீண்ட நாள்கள் தங்க வேண்டியிருக்கும் (needs a longer stay) என்று மருத்துவர்களிடமிருந்து செய்திகள் வருகின்றன.

உடல் நலமின்றிப் போவது யார் ஒருவருக்கும் இயற்கைதான். ஆனால் அதற்காக தமிழக அரசும், அரசின் செயல்பாடுகளும் நிலைகுத்தி நின்றுவிட முடியாது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது மிகச் சரியான கருத்தே ஆகும். பொறுப்பு முதல்வராக ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலமோ, அமைச்சர்கள் குழு ஒன்றிடம் பொறுப்புகளை ஒப்புவிப்பதன் மூலமோ அந்த மாற்று ஏற்பாட்டினைச் செய்ய முடியும், செய்ய வேண்டும்.

ஆனால் இந்த இடைவெளியில் சு.சாமி உள்ளே புகுந்து குழப்பம் செய்ய முயற்சிக்கிறார். குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட வேண்டுமாம். இது என்ன ஜனநாயகம்? ஒரு முதலமைச்சருக்கு உடல் நலம் கெடுமானால், உடனே ஆட்சியைக் கலைத்து விடலாமா? பிரதமருக்கு உடல் நலிவு ஏற்படுமானால் அதற்கு என்ன செய்வது?

ஜெயலலிதா ஆட்சியின் குறைபாடுகள் குறித்து நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் 356 ஆம் பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்பதற்கு என்றும் நாம் எதிரிகள். அந்த ஜனநாயக எதிர்ப்போக்கை ஒருநாளும் நம்மால் ஆதரிக்க முடியாது.

ஆட்சியைக் கலைக்கச் சொல்லும் சு.சாமிக்குத் தமிழ்நாட்டைப் பற்றி அப்படி ஒன்றும் கவலை கிடையாது. இச்சூழலைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில், பா.ஜ.க ஆட்சியைக் கொண்டு வருவதே அவரின் நோக்கம்.

காவிரிச் சிக்கலில் தமிழ்நாட்டுக்குப் பச்சைத் துரோகம் செய்த மத்திய அரசும், பா.ஜ.க.வும் கொல்லைப்புற வாசல் வழியாகத் தமிழக ஆட்சிக்கு வர முயல்வதைத் தமிழ்மண் தடுத்தே தீரும்.

அ.தி.மு.க. நம் இன்றையப் பகை. பார்ப்பனியமோ நம் பரம்பரைப் பகை!

என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்போது நடக்கும் அரசியல் சிக்கலில் திமுகவின் நிலையை சுபவீயின் கூற்று வெளிப்படுத்துகிறது. மிக நிதானமாகவும் நாகரிகமாகவும் இச்சிக்கலை திமுக அணுகுகிறது. இதனால் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைத்த இந்துத்துவ சக்திகள் அதிர்ந்துபோய் நிற்கின்றன.

Leave a Response