வேலை வெட்டி இல்லாத இளைஞராகவே நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படத்தில் உயரிய இலட்சியம் கொண்ட கலைஞன் வேடம். நாடக நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், திரைத்துறையில் பெரிய கதாநாயகன் ஆகவேண்டுமென்று விரும்புகிறார்.
அதற்கான முயற்சிகளில் இருக்கும் நேரத்திலேயே அவருக்குக் காதலும் வருகிறது. இலட்சியத்திலும் காதலிலும் வெல்கிறார். எப்படி என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
அழகிய இளைஞன், செவிலியர் என இரு வேறு தோற்றங்களில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒரு ஆண் பெண் வேடமிடுவதில் இருக்கும் ஆயிரம் சிக்கல்களையும் மீறி வரவேற்புப் பெறுகிறார் சிவா. பெண் வேடமிட்டு இளைஞர்களையும் இயல்பான தோற்றத்தில் யுவதிகளையும் கவர்ந்துவிடுகிறார்.
நாயகி கீர்த்திசுரேஷ் மிக அழகாக இருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார். நயன்தாராவின் இடத்தைக் கைப்பற்றிவிடுவார் என்று தோன்றுகிறது.
சிவகார்த்திகேயன் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, கீர்த்தி சுரேஷ் பெற்றோராக வரும் நரேன் – கல்யாணி நட்ராஜன், இயக்குநராகவே வரும் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் பொருத்தமாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் படத்துக்குப் பெரும்பலம். திரைக்கதையில் இருக்கும் தொய்வுகளைக் காட்சியழகில் சரி செய்கிறார்.
அனிருத்தின் இசையில் மெல்லிசை, துள்ளிசை என எல்லாவகைப் பாடல்களும் இருக்கின்றன. சிரிக்காதே பாடல் சிறப்பு. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ரூபன் இன்னும் கொஞ்சம் கத்தரியைப் பயன்படுத்தியிருக்கலாம். ரசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பு நாயகனின் பெண் குரல் நேர்த்தியாக இருக்கப்பயன்பட்டிருக்கிறது.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரமாண்டம் தெரிகிறது. நிறைய துணைநடிகர்கள் விலை உயர்ந்த பொருட்கள், அரிய கலைப்பொருட்கள் ஆகியன கதையை மீறி காட்சிகளை ரசிக்க வைக்கின்றன.
அறிமுக இயக்குநர் பாக்யராஜ்கண்ணன் முதல்படத்திலேயே கிடைத்திருக்கும் பெரிய வசதிகளைப் பயன்படுத்தி நல்ல பொழுதுபோக்குப் படம் கொடுக்க மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.
குடும்பத்தோடு போய் ரசித்துவிட்டு வரக்கூடிய படம்.