
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார்(வயது 36) செப்டம்பர் 22 இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையைக் கண்டித்து கோவையில் பெரும் கலவரத்தில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். சசிகுமார் உடல் பிரேத பரிசோனை நடந்த கோவை அரசு மருத்துவமனை முன்பு திரண்ட அவர்கள் திடீரென கடைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அரசு பேருந்துகள், தானிகள், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
வன்முறையின் உச்சகட்டமாக துடியலூரில் காவல்துறை ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. 3 கடைகள் கொளுத்தப்பட்டன. கல்வீச்சு தாக்குதலில் காவலர்களும் காயம் அடைந்தனர். கோவை மாநகர் மற்றும் துடியலூரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்து அமைப்புகளின் இந்த வன்முறை வெறியாட்டத்தைப் பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். கோவையில் அமைதி ஏற்படுத்த வலியுறுத்தியும், இந்து முன்னணி சசிகுமார் கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்யவும், இந்தக் கொலையைப் பயன்படுத்தி கலவரத்தைத் தூண்டி விட்டு கோவையை குஜராத்தாக மாற்றுவோம் எனக் கூறிய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கவும், கலவரத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்யவும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தவும் வலியுறுத்தி் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம், மக்கள் சிவில் உரிமை கழகம், தமிழ் வழக்காடு மொழி கூட்டியக்கம், சார்பில் கோவை மாநகர கமிஷனர், மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் 23.09.2016 அன்று புகார் அளிக்கப்பட்டது.
இவர்களுடன் சென்ற வழக்குரைஞர் மு.ஆனந்தன், கோவை சரித்திரத்தில் முதன் முறையாக அரசு மருத்துவமனையிலிருந்து 18 கி. மி. தூரத்திற்கு ஒரு இறுதி ஊர்வலம். அதுவும் முக்கிய நகர வீதிகள், பதற்றம் நிறைந்த பகுதிகள், இஸ்லாமியர் வாழ்விடங்கள், வர்த்தக நிறுவனங்கள், மசூதிகள் நிறைந்த பகுதிகள் வழியாக. இறந்தவர் என்ன பேரறிஞர் அண்ணாவா, எம். ஜி. ஆரா, இது வன்முறையை விதைப்பதற்காகவே நடத்தப்பட்ட ஊர்வலம். மக்கள் பிரச்சனைகளுக்காக ஊர்வலங்களை, ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்காத டாஸ்மாக் காவல் துறை இப்படி ஒரு இந்து மத வெறிக் கலவர ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தது என்று சொல்லுவதை விட அந்த ஊர்வலத்தில் முன்னிலும் பின்னிலும் காவிக்கொடியை ஏந்திச் சென்றது என்று சொல்வது தானே சரியாக இருக்கும்……. தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா… இல்லை பிஜேபி ஆட்சி யா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கிடையே வன்முறையில் ஈடுபட்டு, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக உக்கடம், காந்திபுரம், ரேஸ் கோர்ஸ், சாய்பாபாகாலனி, ஆர்.எஸ்.புரம், ரத்தினபுரி, போத்தனூர், குனியமுத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். இதில் தொடர்புடைய 63 பேரை காவல்துறை கைது செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
புறநகர் பகுதிகளான துடியலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர் பகுதிகளில் பொதுசொத்துக்களை சேதப்படுத்தியதாக 45 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோல முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநகர பகுதிகளில் 30 பேரும், புறநகர பகுதிகளில் 240 பேரும் கைது செய்யப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட மேலும் பலரை காவல்துறை தேடி வருவதாகவும், கடைகளின் மீது கல்வீசி தாக்கிய சம்பவம் தொடர்பாக ஏராளமான வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை அடிப்படையாக வைத்து பொது சொத்துக்களை சேதப்படுத்திய மேலும் பலரை காவல்துறை தேடி வருவதாகவும் சொல்லப்படுகிறது.


