
ஈழத்தில் ஆயுதப்போர் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட ரீதியில் இடம்பெற்று வரும்,
சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் உள்ளிட்ட கட்டமைப்பு சார் இனவழிப்புச் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
விவசாய மற்றும் வர்த்தக பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்
காணாமல் போனோருக்கு நீதி வேண்டும்.
கடற்தொழிலில் தென்னிலங்கை மீனவரின் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்தும் இன்னும் மூன்று மாதங்களில் இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு வரவுள்ளது. அந்த புதிய அரசியல் யாப்பானது தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் நீண்டகாலமாக சந்தித்துவரும் கட்டமைப்பு சார் இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில்,இணைந்த வடக்கு கிழக்கில், தமிழர் தேசம், தமிழ்த்தேசத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரிக்கும் சமஸ்டி யாப்பாக உருவாக்கக் கூடிய நிலையை தோற்றுவிக்க வேண்டும் என்கிற உறுதியுடனும் தமிழ்மக்கள்பேரவை எழுகதமிழ் எனும் பெயரில் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இன்று காலை (செப்டம்பர் 24) இப்பேரணிக்காக யாழ் முற்றவெளியில் திரண்டனர் தமிழ் மக்கள். யாழ் நகரப்பகுதி வர்த்தக நிலையங்கள் உட்பட குடாநாட்டின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தகர்கள் ஆதரவுடன்
யாழில், ஆரம்பமான எழுக தமிழ் பேரணி, யாழ், முற்றவெளி மைதானத்தினை சென்றடைந்து நிகழ்வுகள் நடைபெற்றன.
மக்கள் தமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு முழக்கங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டனர்.
அலையாக ஒன்று திரண்ட மக்கள் “தேசத் துரோகியே வெளியேறு”, ”சிங்கள இராணுவமே வெளியேறு” போன்ற பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.
யாழ் முற்றவெளி மைதானத்தில், போரில் இரண்டு கைகளையும்,இரண்டு கண்களையும்.இழந்த தமிழ் அன்பர் சுடர் ஏற்ற நிகழ்வு தொடங்கியது.
உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது திரண்டிருந்த பல்லாயிரக்காணக்கான மக்கள் மத்தியில், முதல்வர் விக்னேசுவரன் உரையாற்றினார்.
அவர் உரையில்,
கொளுத்தும் வெயிலில் எழுக தமிழ் பேரணியில் வரலாறு காணாத மக்கள் ஒன்று குவிந்துள்ளனர்.
இந்தப் பேரணி ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி அல்ல. நாம் எமது மத்திய அரசை எதிர்த்து இதை நடாத்தவில்லை. ஏன் இலங்கைத் தமிழரசுக் கட்சியை எதிர்த்துக் கூட நடாத்தவில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். அதாவது இன்றைய காலகட்டத்தில் பாராளுமன்றத்திற்குத் தெரியப்படுவதாலோ மாகாணசபைகளுக்குத் தெரியப்படுவதாலோ எமது உரிமைகளை நாம் வென்றெடுத்துக் கொள்ள முடியாது. மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்திற்கு அவசியம் குறிப்பிட்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாத காலத்தின் அனர்த்த அழிவுகளின் பின்னரான தமிழ் மக்களின் விடிவுக்கான தீர்வு சம்பந்தமாக ஏற்கனவே எமது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பல கூறியுள்ளன.
சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் எமது இளைஞர்களின் குரல்கள் எவருக்குங் கேட்காதது ஏன்?
அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு காழ்ப்புணர்ச்சி எங்கோ ஒரு அதிகார பீடத்தின் அடி மனதில் ஆழப் பதிந்துள்ளதா?
போர் முடிந்து ஏழு வருடங்களின் பின்னர் கூட கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுவது எம்மால் சகிக்க முடியாததொன்றாக இருக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் 17க்கு அதிகமான சித்திரவதை நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றால் எமது கூட்டான மனோநிலைகளில் மாற்றமேற்படவில்லையா என்று கேட்கத்தேன்றுகின்றது.
இராணுவமயமாக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன? தற்போதும் தமிழ் மக்களின் பல காணிகளை இராணுவத்தினர் அபகரித்து கொண்டுதான் உள்ளனர் இதனை ஏன் தடுக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சிங்கள அரசு பல்வேறு விதமான நெருக்கடிகளைக் கொடுத்தும் மறைமுக மிரட்டல்கள் விடுத்தும் அதற்கெல்லாம் அஞ்சாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியில் திரண்டனர். அதோடு அவ்வளவு பேரும் பெரும் உணர்வெழுச்சியுடன் முழக்கங்கள் இட்டதையும் கவனித்த சிங்கள அரசாங்கம் பேரதிர்ச்சி அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.


