ஆண்டவன் கட்டளை – திரைப்பட விமர்சனம்

சொந்த அக்காவின் நகைகளை வாங்கிக் கடன்பட்ட விஜயசேதுபதி, வெளிநாடு போய் சம்பாதித்து கடனை அடைத்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறார். அதற்காக மதுரைப் பக்கத்திலிருந்து நண்பர் யோகி பாபுவுடன் சென்னை வந்து கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) எடுக்க முயல்கிறார். இடைத் தரகர்களை சந்திக்கிறார். அங்கு தொடங்குகின்றன சோதனைகள். ஊர் விட்டு ஊர் வருகிற இளைஞர்கள் சந்திக்கிற பொதுவான சோதனைகள், இடைத்தரகர்களால் விஜயசேதுபதிக்கு ஏற்படும் பிரத்யேக சோதனைகள் என நிறைய சோதனைகள். அவற்றை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார்? என்பதை சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

கடன் சிக்கல், வாடகை வீட்டுக்காக அலைவது, உண்மை சொல்லி மிகப் பெரிய வாய்ப்பை இழந்த வருத்தம், பொய் சொல்லி சமாளிக்கும் நம்பிக்கை, வாய் பேச முடியா திறனாளியாக இருப்பது உட்பட பல்வேறு உணர்வுகளையும் திருத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார் விஜயசேதுபதி.

பத்திரிகையாளர் வேடத்தில் நாயகி ரித்திகா சிங். பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சரை எதிர்த்து வாதம் செய்கிறார். பத்திரிகையாளர்கள் இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கு அவருடைய வேடம் எடுத்துக்காட்டு. நன்றாக நடித்து நல்லபெயர் வாங்குகிறார்.

யோகி பாபு வரும் காட்சிகள் எல்லாமே சிரிப்பு, சிறப்பு. அவருடைய வேடம் அவருக்கும் படத்துக்கும் பெரும்பலம்.

நேசன் என்கிற ஈழத்தமிழர் கதாபாத்திரத்தின் மூலம், தமிழகத்தில் அவர்கள் படுகிற துயரங்களைக் காட்டியிருக்கும் இயக்குநருக்குப் பாராட்டுகள். ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத்தமிழர்களுக்கும் அரசியல் சட்டங்களை மீறி உணர்வுப்பூர்வமான பிணைப்பு இருக்கிறதென்பதை மிக நன்றாகக் காட்டியிருக்கிறார். நெருக்கடியான கட்டத்தில் ஈழத்தமிழரைக் காட்டிக் கொடுக்காத தமிழகத்தமிழர், அதே நெருக்கடியிலிருந்து தமிழகத்தமிழரை விடுவிக்க தாமே முன்வந்து சரணடைகிறார் ஈழத்தமிழர். இதன்மூலம் மிக அழகாக இன உணர்வைக் காட்டிவிட்டார்கள். அந்த நெருக்கடியின்போது நேர்மையான பத்திரிகையாளரான நாயகியும் ஈழத்தமிழரைக் காட்டிக் கொடுக்கமாட்டார் என்பதும் கூடுதல் சிறப்பு.

இடைத்தரகராக நடித்திருக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, வழக்குரைஞராக வரும் ஜார்ஜ், நீதிபதியாக நடித்திருக்கும் பெண்மணி, கூத்துப்பட்டறை நிறுவனராக இருக்கும் நாசர் ஆகியோர் படத்தில் மிகவும் கவனிக்கப்படுகிறார்கள்.

விஜயசேதுபதியின் மாமாவிடத்திலிருந்து அவரைக் காப்பாற்ற, எவ்வளவு கடன்? என்று கேட்டுவிட்டு தொகையைக் கேட்டதும் நாசர் காட்டுகிற முகபாவம் வேறு எவராலும் செய்யமுடியாதது.

குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரியாக வரும் ஹரிஷ், மலையாளி என்று காட்டியிருப்பதில் உள்ள அரசியலுக்காகவும் இயக்குநரைப் பாராட்டலாம்.

வெள்ளக்காரன் இருந்த வரைக்கும் காந்தி பாதுகாப்பாதான் இருந்தாரு, லண்டன்லயும், சவுதிலயும் சம்பாதிக்கிற வீட்டு உரிமையாளர் கிறிஸ்டீனுக்கும், முஸ்லிமுக்கும் வாடகைக்கு விடமாட்டேன் என்பது ஆகியனவற்றில் சமகாலம் பற்றிய எச்சரிக்கையை அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இடைத்தரகர்களை நம்பி ஏமாறாதீர்கள் என்கிற கருத்தைச் சொல்லும் படமென்று முதலிலேயே குறிப்பிட்டு விட்டார்கள். அந்த இடைத்தரகர்களில் இந்துத்துவா அரசியல், மலையாள அதிகாரவர்க்கம், உயர் வர்க்கம் கட்டமைத்த பொதுப்புத்திகள் ஆகியனவும் அடக்கம் என்பதைக் குறிப்பால் உணர்த்திவிட்டார்கள்.

இக்கதையை எழுதிய அருட்செழியன் அதைக் கலகலப்பான படமாக்கி மக்களை மகிழ்வித்திருக்கும் இயக்குநர் மணிகண்டன் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த நடிகர்கள் ஆகிய அனைவரும் நல்ல வரவேற்பைப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

Leave a Response