1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தில் தமிழாசிரியர்களின் பங்கு முதன்மையானது. மாணவர்களுக்கு தமிழ்மொழி காக்கும் உணர்வையும் இந்தித் திணிப்பை எதிர்த்திடும் போர்க்குணத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழாசிரியர்களே!
மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் நடத்திய முதல் போராட்டம் தான் தமிழகமெங்கும் மாணவர்களை போர்க்களத்தில் இறக்கி விட்டது. அந்தக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் வைத்த முதல் ‘தீ’ தான் காங்கிரசு ஆட்சிக்கு கொள்ளி வைப்பதில் முடிந்தது. இலக்குவனார் இந்தி எதிர்ப்புப் போருக்கு மாணவர்களை அனுப்பியதோடு தாமும் போர்க்களத்தில் குதித்திட்டார்.
மதுரை முதல் சென்னை வரை ‘நடைப்பயணம்’ மேற்கொள்ளப் போலதாக அறிவித்த போது காங்கிரசு முதல்வர் பக்தவத்சலமோ குலை நடுக்கம் கொண்டார். உடனே பணி நீக்கம் செய்திடவும் ஆணையிட்டார். என் அலுவல் போனால் போகட்டும், இந்தியை ஒரு போதும் ஆள விட மாட்டேன்! என்று இலக்குவனார் முழங்கிய போது தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அது முதல் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் தமிழறிஞர் எனும் பெருமை இலக்குவனாருக்கு வந்தடைந்தது.
பேராசிரியர் இலக்குவனார் ‘தொல் காப்பியம்’ நூலை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். அவர் தொல்காப்பியம் குறித்து கூறியது பின் வருமாறு: “இன்று நமக்கு கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் தொல்காப்பியமே தமிழர் வாழ்வின் பலதுறை பற்றி அறிவதற்கு துணை புரிவதாகும். இதனைத் தமிழ்ப்புலவர் மட்டுமே தேர்வு கருதிக் கற்று வருகின்றனர். இது இலக்கண நூல் தான் என்றாலும் ஏனைய மொழிகளிலுள்ள இலக்கண நூல் போன்றதன்று; அண்மை நூற்றாண்டில் தோன்றி வளர்ந்து வரும் மொழியாராய்ச்சியும், இலக்கிய ஆராய்ச்சியும் பண்பாட்டுக் கலைகளாம் உயிரியல், உளவியல், வாழ்வியல், முதலியனவும் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது”
தொல்காப்பியத்தின் காலம் “கி.பி. 2ஆம் நூற்றாண்டு” என்று பல அறிஞர் பெருமக்கள் கூறிய நிலையில், “கி.மு.7ஆம் நூற்றாண்டே” தொல் காப்பியத்தின் காலம் என்று ஆதாரங்களோடு மெய்ப்பித்தார். அதனை, “Thol kappiam in english with critical studies” என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிட்டார். பேரறிஞர் அண்ணா வெளிநாடு சுற்றுப் பயணம் செய்த போது மேற்கண்ட ஆங்கில நூலை போப்பாண்டவருக்கும் அமெரிக்க செனட் உறுப்பினர்களுக்கும் பரிசாக அளித்தார்.
இலக்குவனார் பணிநீக்கம் செய்யப்பட்ட போதிலும் கவலையுறாது தமிழ்த் தொண்டு புரிந்து வந்ததை கண்டுணர்ந்த அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பக்தவச்லம் அரசின் பணி நீக்க ஆணையை இரத்து செய்து மீண்டும் பணி வழங்கிடவும் செய்தார்.
திராவிட இயக்கத்தின் அடியொற்றி வளர்ந்த அறிஞர்களுள் ஒருவராக இலக்குவனார் அறியப்பட்ட போதிலும் பெரியாரைப் போல் சிலப்பதிகாரத்தை பழித்தவர் அல்ல; 1951ஆம் ஆண்டு ஆம்பூரில் திராவிடர்கழகத்தின் இலக்கியப் பிரச்சாரகராக இருந்து கொண்டே சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப்படுத்திப் பேசும் இலக்கியம் என்று பேசினார். அதை விடுதலை ஏடு (15.3.1951) ‘சிலப்பதிகாரத்தின் சிறப்பு’ என்று தலைப்பு கொடுத்து வெளியிட்டது.
அது போல் திராவிட இயக்கங்களுக்கே உரிய ஆங்கிலப் பித்தும் கொண்டவரல்ல; ஒருமுறை நாவலர் நெடுஞ்செழியன் தமிழ்ப்பயிற்று மொழி குறித்த விவாதத்தில் ஆங்கிலத்திற்கு ஆதரவாகப் பேசிடவே, அவர் சினங்கொண்டு தமிழ்மொழி நாவலரா? ஆங்கில மொழிக் காவலரா? என்று அறிக்கை விடுத்தார்.
உண்மையில் இன்றைக்கு ஆளும் திராவிடக்கட்சிகள் ஆங்கிலத்தின் காவல் தெய்வங்களாகவே மாறி விட்டன. இலக்குவனார் இன்று உயிரோடு இருந்திருந்தால் திராவிடக் கட்சிகளை காறி உமிழ்ந்திருப்பார்! எம்.ஜி. ஆர், கருணாநிதி, செயலலிதா எவரும் விதிவிலக்கின்றி ஆங்கிலவழிக் கல்வியை ஆதரித்தே வந்துள்ளனர். இதில் கருணாநிதியும், செயலலிதாவும் போட்டிப் போட்டிக் கொண்டு ஆங்கிலவழிப்பள்ளிகளை பெட்டிக்கடை போல தொடங்குவதற்கு அனுமதி தந்தனர்- தற்போது தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வியைசெயலலிதா அரசு தொடங்கி நடத்தி வருவதோடு அனைத்து வகுப்பு நிலைகளிலும் ஒவ்வொரு ஆண்டும் இதனை விரிவுபடுத்தி வருவதும் கண்கூடு. இது ஒட்டுமொத்தமாக தமிழ்வழிக்கல்வியை சாகடிக்கும் முயற்சியாகும்.
ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழிலேயே நடத்தப்படவேண்டும் என்று ஓங்கி குரல் எழுப்பிய இலக்குவனார் நினைவு நாளிலே செயலலிதா அரசின் ஆங்கில வழிக்கல்விக்கு எதிராகப் போராட சூளுரைப்போம்!
– கதிர்நிலவன்