தமிழர்களை விழுங்க முயலும் சமக்கிருத -ஆரிய முதலை – கி.வீரமணி எச்சரிக்கை

சமக்கிருதம் என்ற பெயரால் பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பு நடைபெறுகிறது.  ஆர்.எஸ்.எஸ்., பாசக அரசின் இந்த முயற்சியை முறியடிக்க சென்னை பெரியார் திடலில் வரும் 6.8.2016 மாலை நடக்க இருக்கும் மாநாட்டுக்கு அணி திரண்டு வருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி  அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

தமிழகப் பெருமக்களின் முக்கிய கவனத்திற்கு! வரும் 6.8.2016 அன்று பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணி வரை மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள புதிய கல்வி குறித்த கருத்தரங்கும், அதனைத் தொடர்ந்து இரவு  9 மணி வரை சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு மாநாடும் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற உள்ளன.

இந்த இரு நிகழ்ச்சிகளும் இன்றைய கால கட்டத்தில் மிகவும் முக்கியமானவை; கருத்தரங்கில் கல்வியாளர்கள் கலந்துகொள்வார்கள். சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாட்டின் முக்கிய கட்சித் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

கல்வித் திட்டம் என்று இப்பொழுதுதான் முகமூடி அணிந்து நவீன குலக்கல்வியைப் புகுத்த திட்டமிட்டுள் ளார்கள் என்று கருத முடியாது.

இது ஆர்.எஸ்.எஸின் நீண்ட காலத் திட்டமே! வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்தபோது, 1998 அக்டோபர் 22ஆம் தேதியன்று, டில்லியில் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸின் கல்வி நிபுணர் என்று கூறப்படும் சிட்டியங்லா என்பவரால் தயாரிக்கப்பட்ட திட்டம் அது.

அதில் கூறப்பட்டவை.

1) இந்தியக் கலாச்சாரத்தை மய்யமாகக் கொண்டு முதல் வகுப்பு முதல் உயர்நிலைக் கல்வி வரைக்கும் பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

2) பெண்களைப் பொறுத்தவரை வீட்டை நிர்வகிப்பது சம்பந்தமாகப் போதிக்கப்பட வேண்டும்.

3) இந்தியாவின் கலாச்சார ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதற்காக மூன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரைக்கும் சமஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்க வேண்டும்.

4) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீதிபோதனை வகுப்புகள்  நடத்தப்பட வேண்டும் (பெரும்பாலும் இராமா யணம், கீதை, இதிகாசப் புராணக் கதைகள்தான் இடம் பெறும்).

‘சரஸ்வதி வந்தனா’

5) சரஸ்வதி வந்தனா, வந்தே மாதரப் பாடல்களை, சகலப் பள்ளிகளிலும் கட்டாயமாக்க வேண்டும்.

6) பாடத் திட்டங்கள் யாவும் சுதேசிமயமாக்கப்பட வேண்டும்.

7) நாட்டின் நான்கு பிரதேசங்களில் சமஸ்கிருதப் பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட வேண்டும்.

8) இந்தியத் தத்துவப் பாடங்கள் போதிக்கப்பட வேண்டும்.

அ) உபநிஷத்துகள், வேதங்கள் முதலியவை பாடத் திட்டத்தில் இடம் பெற வேண்டும்.

ஆ) எல்லோருக்கும் உயர்கல்வி அளித்திடும் இன்றைய முறையை மாற்றி அமைத்திட வேண்டும்! அப்பொழுதுதான் கல்வியைத் தரமானதாக உயர்த்திட முடியும்.

இ) கல்வி கூடங்களைத் தொடங்குவதற்கு அரசு அனுமதி தேவையில்லை. 10 வருடங்கள் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்களுக்கு உடனே அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்டாக வேண்டும்.

அந்தக் கல்வியமைச்சர்கள் மாநாட்டில் சரஸ்வதி வந்தனா, சமஸ்கிருத சுலோகங்கள் கூறப்பட்டன. அதனை எதிர்த்து அம்மாநாட்டில் பங்கேற்ற தமிழகக் கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் வெளிநடப்புச் செய்தார். அவருடன் புதுவை, கேரளம், கருநாடகம், மேற்கு வங்கம், திரிபுரா, பீகார், பஞ்சாப், ஒரிசா, மத்தியப்பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களைச்சேர்ந்த கல்வி அமைச்சர்களும் அந்தக் கல்வித் திட்டத்தை எதிர்த்து முழக்கமிட்டுக் கொண்டே வெளி நடப்புச் செய்தனர்.

அன்று  கலைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். கல்வித் திட்டம் என்ற கரு இப்பொழுது இன்னொரு பெயர் தாங்கித் தன் தலையை நீட்டியுள்ளது. நம்மை ஆழமும் பார்க்கிறது.

இப்பொழுது கல்வித் திட்டத்தைத் தயாரித்தது 5 பேர் கொண்ட குழு என்றாலும் இதில் ஒரே ஒருவர்தான் கல்வியாளர் – அந்தக் கல்வியாளரும் ஜே.எஸ்.ராஜ்புத் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரரே!

சிந்து சமவெளியில் சிவலிங்கம் இருந்தது என்ற கதைவிட்டவரும் இவரே.

அய்ந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் தொழில் படிப்புக்குச் செல்ல வேண்டும் என்றால், அந்தப் பத்து வயதில் அவர்களின் தந்தை வழித் தொழிலைத் தானே தேர்ந்தெடுப்பார்கள். மறைமுகமாகக் குலக் கல்வியைத் தூண்டும் தூண்டில் திட்டம் தானே இது!

பள்ளிகளை அருகில் உள்ள ஆசிரமங்களுடன் தொடர்புப்படுத்துவார்களாம்! என்னே பார்ப்பனத்தனம்!

இடஒதுக்கீடு என்பது பொருளாதாரம் மற்றும் திறமையின் அடிப்படையில் இருக்குமாம் – கல்விக் கடன்களும் கூட அந்த அடிப்படையில் தான் இருக்குமாம்.

இருபால் மாணவர்கள் சேர்ந்து படிக்கக் கூடாதாம்! கல்வியில் மாநில உரிமை என்பது முற்றிலும் பறிக்கப்படுகிறது.

+2 தேர்ச்சிக்குப் பின் கல்லூரிகளில் சேர தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுமாம். இப்படியாக இந்துத்துவா கோட்பாடு கொலு ஏறுவதற்கான திட்டம் திரைமறைவிலிருந்து நம்மைக் கொத்த துடித்துக் கொண்டு இருக்கிறது!

ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும் ஒரு தலைமுறை தப்பித் தவறிப் படித்துத் தலை எடுக்கத் தலைப்பட்டது என்றவுடன், அதற்கு மரண அடி கொடுத்துத் தரைக்குள் புதைக்க ஆரியம் சூழ்ச்சித் திட்டத்தை வகுத்துள்ளது.

இந்தியை ஏன் படிக்க வேண்டும் என்றால் இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படுவது இந்திதான் என்று சமாதானம் சொல்லுவார்கள். அப்படியானால் மக்களால் அறவே பேசப்படாத சமஸ்கிருதம் எதற்கு என்று கேட்டால், அது நமது கலாச்சாரத்துக்காக என்று சாமர்த்தியமாகப் பதில் சொல்ல முயற்சிக்கின்றனர்.

சமஸ்கிருதம் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. அது ஒரு கலாச்சாரப் படையெடுப்பு – அதாவது பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே! சமஸ்கிருதத்தை சொல்லிக் கொடுப்பது
என்றால் வேதங்களும், உபநிஷத்துக்களும் சாஸ்திரங்களும், புராணங்களும், இதிகாசங்களும் சொல்லிக் கொடுக்கப்படும் என்பதுதான் பொருள்.

வருணாசிரமம், பிறவிப் பேதம் என்பவை இதன் மூலம் பிஞ்சு உள்ளங்களில், மாணவர்கள் மத்தியிலும் ஊட்டப்படும் அபாயத்தை அலட்சியப்படுத்தி விட முடியுமா?

மத்தியில் பிஜேபி ஆட்சி அமைந்தது முதற்கொண்டு தொடர்ந்து சமஸ்கிருதம் தொடர்பான பரப்புதலில்தான் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) புதிய திட்டம் ஒன்றை வகுத்துச் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து 120-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி தலைவர் வேத பிரகாஷ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்:

“நாடு முழுவதும் சமஸ்கிருத மொழியைக் கற்பிப்பதில் அனைத்துப் பல்கலைக் கழகங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்காகப் பல்கலைக் கழகங்கள் தங்களிடம் உள்ள சமஸ்கிருத ஆசிரியர்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

அனைத்து இந்திய மொழிகளைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்காக ‘பாரத் வாணி’ என்ற இணையதளத்தை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

சமஸ்கிருதம் தொடர்பான நூல்களை வைத்திருக்கும் பல்கலைக் கழகங்கள், அவற்றை ‘பாரத்வாணி’ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என்று யுஜிசி தலைவர் வேத பிரகாஷ் பல்கலைக் கழகத் துணை வேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
(‘தினமணி’ 22.1.2016 பக்கம் – 10)

தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் கோபால்சாமி அய்யங்கார் தலைமையில் ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டு சமஸ்கிருதமொழியைப் பரப்புவதற்குத் தேவையான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன.

அரியானாவில் சமஸ்கிருதப் பல்கலைக் கழகத்தைத் தொடங்க ஆயிரம் கோடி ரூபாயை வாரி வழங்கியுள்ளது மத்திய பிஜேபி அரசு.

அரசின் ஓர் அங்கமாக சமஸ்கிருதப் பிரச்சார நிறுவனத்திற்கு 2014-2015ஆவது ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ.270 கோடி செலவுக்கான கணக்கை இன்று வரை ஒப்படைக்கவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதிராணி கூறவில்லையா? அப்படியிருந்தும் 2015-2016ஆவது ஆண்டு வரவு செலவு கணக்கில் சமஸ்கிருதப் பிரச்சார நிறுவனத்துக்கு மேலும் 740 கோடி ரூபாய் தாரை வார்க்கப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 8ஆம் அட்டவணையில் 22 மொழிகள் இருக்க, இந்த சமஸ்கிருத மொழிக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகளும், முன்னுரிமைகளும்? இவ்வளவுக்கும் மக்களால் பேசப்படாத செத்தொழிந்த மொழி சமஸ்கிருதம். அது பார்ப்பனக் கலாச்சாரத்தின் சின்னம் என்ற ஒரே காரணம் தானே இதன் பின்னணியில் உள்ளது.

இந்தப் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை  – திணிப்பை முறியடிக்கக்கூடிய சக்தி தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணுக்கே உண்டு.

அன்று 1938இல் ‘பிரதம அமைச்சராக’ இருந்த ஆச்சாரியார் இந்தியைத் திணித்தார். சமஸ்கிருதத்தை படிப்படியாக திணிக்கவே முதற்கட்டமாக இந்தியைப் புகுத்துகிறோம் என்று சென்னை லயோலா கல்லூரியில் பேசினார். அதனை முறியடித்தது தமிழ் மண் – தந்தை பெரியார் தலைமையில்.

இப்பொழுது அதே இந்தி – அதே சமஸ்கிருதம். மூர்க்கமாக பெரும்பான்மை மக்கள்மீது திணிக்கப்படுகிறது – பார்ப்பன பாரதிய ஜனதா ஆட்சியால். தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி மட்டுமே என்று அண்ணா அவர்கள் முதல் அமைச்ச ராக இருந்தபோது தி.மு.க. ஆட்சியில் சட்டமாக நிறைவேற்றப் பட்டு விட்டதே! இந்த நிலையில் சமஸ்கிருதத் திணிப்பா!

தந்தை பெரியார் பிறந்த அதே தமிழ் மண்தான் இப்பொழுதும் அதனை முறியடிக்கப் போகிறது – முறியடித்தாக வேண்டும்!

அருமைத் தமிழ்ப் பெருங்குடி மக்களே – இது ஒரு கட்சியின் அழைப்பல்ல – ஒட்டு மொத்த பார்ப்பனர் அல்லாத மக்களின் அன்பழைப்பு! நம்மை விழுங்க வாய் பிளக்கும் சமஸ்கிருத – ஆரிய முதலையின் முயற்சியை முறியடிப்போம்!

முதற் கட்டமாக சென்னை பெரியார் திடலில் வரும் சனியன்று (6.8.2016) சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. பேரலையாய், பேரணியாய்த் திரண்டு வந்து முறியடிப்போம்! வாரீர்! வாரீர்!! என்று அழைக்கின்றோம்.
8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் –

8.8.2016 திங்கள் அன்று காலை 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தின் அருகில் நடக்கவிருக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்பீர்! பங்கேற்பீர்!! என்று அனைத்துத் தமிழ் உள்ளங்கள் சார்பிலும் அழைக்கின்றோம் – அழைக்கின்றோம்.
தந்தைபெரியார் பணி முடிப்போம்!

வாரீர்! வாரீர்!!

என்று சொல்லியிருக்கிறார்.

Leave a Response