நண்பர்களாய் காமம் உணர்வதற்குள்
கடந்து விடுகின்றன
ஆறேழு ஆண்டுகள்
நம்புங்கள்
நம்மைவிடத் தெளிந்தவர்கள்
நம் பிள்ளைகள்
காதலர் நாள்
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
தாலிகள் வைத்திருக்கிறீர்களா?
இப்படி எளிய சொற்களில் இனிய மற்றும் அரிய எண்ணங்களைக் கூறி, மழைத் தும்பிகள் மூலம் இளையோரை தன்பால் ஈர்த்தார் பாவலர் அறிவுமதி.
உடல், உயிர், இனம், மொழி, சமுதாயம் ஆகியனவற்றின் மீதான அளவு கடந்த காதலை மிக அளவான சொற்களில் வெளிப்படுத்தி அவர் எழுதிய பாக்கள், குங்குமம் வார ஏட்டில் தொடராக வெளியானபோதே ஆகப்பெரும் வரவேற்பைப் பெற்றன.
வாராவாரம் சிதறிய தேன் துளிகள் இப்போது பெரும் தேனடையாக உருவாகியிருக்கிறது. தொடராக வந்த பா க்கள் இப்போது புத்தகமாக வடிவெடுத்திருக்கிறது.
கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ள அந்நூல் அறிமுக நிகழ்வு, ஜூலை 29 அன்று மாலை நிகழ்ந்தது.
இன்றைய இளைய உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கும் திரைநாயகன் சிவகார்த்திகேயன், கவிஞர் ஜோ.மல்லூரி, தயாரிப்பாளர் வின்சென்ட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடராக வந்தபோதே படித்துச் சுவைத்த கவிதைகளைத் தொகுப்பாகப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது என்று எல்லோரும் வாழ்த்தினர்.