ஜி.என்.ஆர்.குமரவேல் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்திருக்கும் வாகா படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கணேஷ்விநாயக் இயக்கத்தில் அவர் நடிக்கும் வீரசிவாஜி படத்திலும் அவர் சம்பந்தப்பட்ட வேலைகள் நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் முடிசூடாமன்னன் படத்தில் நடிக்கிறார்.
இதற்கிடையே அவரே ஃபர்ஸ்ட் ஆர்டிஸ்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.
இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ‘நெருப்புடா’ படத்தைத் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் அசோக் குமார் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன், பொன்வண்ணன், மதுசூதன் ராப், நாகிநீடு ஆகியோரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜேசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ரோகேஷ் பாடல்களை எழுதுகிறார். தீயணைப்பு வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு, ரஜினியின் தீவிர ரசிகராக நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 11 தொடங்கியது, ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
அதன்பின் அவர் முடிசூடாமன்னன் படத்துக்குப் போய்விட்டார் என்கிறார்கள். இது ஏற்கெனவே திட்டமிட்டதுதான் என்று அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை வேறென்று விசயமறிந்தவர்கள் சொல்கிறார்கள். இந்தப் படப்பிடிப்பு தொடங்கியவுடன் படத்தின் கதையில் சிக்கல் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
படப்பிடிப்பு நடக்கிற நேரத்தில் விக்ரம்பிரபுவின சகோதரர் துஷ்யந்த் நடித்த மச்சி படத்தின் கதையும் இந்தப் படத்தின் கதையும் ஒரே மாதிரி இருப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால், அதிர்ச்சியடைந்த விக்ரம்பிரபு, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, கதையில் திருத்தம் செய்யுங்கள், அதன்பின் படப்பிடிப்பு நடத்தலாம் என்று சொல்லிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனால், இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக வேறு வாய்ப்புகளைக் கூட விட்டுவிட்டு வந்த தொழில்நுட்பக்கலைஞர்கள் நொந்துபோயிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நெருப்பு என்றால் புகையாமலா?