விஞ்ஞானி – விமர்சனம்…

குறைந்த அளவு தண்ணீரில் பயிராகும் ஒரு நெல்லை உருவாக்குகிறேன், அந்த அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டால் தாகமே எடுக்காது என்று சவால் விட்டு அப்படி ஒரு நெல்லை உருவாக்க முனைகிறார் விஞ்ஞானி பார்த்தி.

பார்த்தியின் மனைவியாக மீராஜாஸ்மின் நடித்திருக்கிறார். ஏற்றுக்கொண்ட வேடத்துக்கு உண்மையாக நடித்திருக்கிறார். இவர் தொடர்ந்து நடிப்பது நல்லது என்று நினைக்க வைத்துவிட்டார். ஒரு இலட்சியத்துக்காகக் கல்யாணம் செய்துகொண்டாலும், கணவனோடு இன்னொரு பெண் நட்பாகப் பழகுவதைப் பார்த்துப் பொருமி என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொல்லுகிற இடத்தில் பாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

விவேக் படத்தில் இருப்பது படத்துக்குப் பலமாக இருக்கிறது. மீராஜாஸ்மினுக்கும் பார்த்திக்கும் திருமணம் செய்து வைக்கத் திட்டமிடும்போது அதில் அவருடைய மனைவியாக நடித்திருக்கும் தேவதர்ஷினி குறுக்கே வந்து திட்டத்தையே சொதப்பிவிடும் காட்சிகள் சிரிக்கவைக்கின்றன.

கவர்ச்சிக்காக சஞ்சனாசிங் இருக்கிறார். அவர் தப்புத்தப்பாக தமிழ் பேசுவது நகைச்சுவைக்கு உதவுகிறது.

ஒரு கிராமத்தில் விவசாயம் பொய்த்துப் போன நிலையில், விவசாயநிலங்களை விலைக்கு வாங்கி அதில் தொழிற்சாலை அமைக்க ஒருவர் வருகிறார். கிராமத்தைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் அதற்குத்துணை நிற்கிறார், அந்த நேரத்தில் நாயகி மீராஜாஸ்மினும் அவருடைய தந்தை தலைவாசல்விஜய் ஆகியோர் அதைத் தடுத்து நிறுத்துகின்றனர். இந்தக்காட்சிகள் அப்படியே கத்தி படத்தை நினைவுபடுத்துகின்றன.

கத்தியில் நிலத்தடியீல் ஓடும் நீரைக் கண்டுபிடிப்பது போல இந்தப்படத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தொல்காப்பியர் புதைத்து வைத்த நெல்லைக் கண்டுபிடிக்கிறார்கள். விஞ்ஞானியாக இருக்கும் நாயகன் பார்த்தியே தமிழால் எதுவும் முடியாது தமிழ் அறிவியல் மொழி அல்ல என்று சொல்கிறார்.

அதன்பின்னர், இருபதாம்நூற்றாண்டில் குறைந்தநீரில் பயிராகி உண்டபின் தாகத்தைக் கொடுக்காத நெல் ஒன்றைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கும் போது தொல்காப்பியர் அப்படி ஒரு நெல்லை உருவாக்கிப் பாதுகாத்து வைத்திருக்கிறார் தொல்காப்பியத்திலும் அதற்கான குறிப்புகள் இருக்கின்றன, அந்த நெல்லின் பெயர் தாகம்தீர்த்தான் நெல் என்று காட்டியிருக்கிறார்கள்.

இதன் மூலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் அறிவியல்மொழியாகத்தான் இருந்தது என்று சொல்கிறார் இயக்குநர் பார்த்தி. இந்த விசயத்தை வைத்துக்கொண்டு வியாபாரப்படம் எடுக்கிறேன் என்று எண்ணிக்கொண்டு, ஒரு கொலையில் படத்தைத் தொடங்கி அதற்கான விசாரணை என்று போய் ஏராளமான படங்களில் பார்த்த மாதிரியே காட்சிகளை வைத்துப் போரடிக்க வைத்துவிட்டார்கள்.

நாயகன் பார்த்தியின் உதவியாளராக சஞ்சனாசிங்கை வைத்திருக்கிறார்கள். மீராஜாஸ்மினோடு காதல்பாடலில் நடித்தது போதாதென்று மீராவைக் கனவு காணவைத்து அந்தக்கனவில் சஞ்சனாவோடு ஆட்டம் போடுகிறார் நாயகன் பார்த்தி. இவ்வளவு செலவு செய்து படத்தை எடுக்கும்போது இதுகூட இல்லையென்றால் எப்படி என்று நினைத்துவிட்டார் போல.

உண்மையான விஞ்ஞானியாக இருக்கும் ஒருவர் தமிழ் மொழியை அறிவியல்மொழி என்று நிறுவமுற்பட்டிருப்பது நல்லவிசயம்.

 

Leave a Response