என்னை பரதேசி என்று இளங்கோவன் கூறுவதால் சிறுமைப்பட்டு விடமாட்டேன் – சீமான் பதில்

 

வேடசந்தூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜ் என்கிற வெற்றி வேந்தனுக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய சீமான், ” தமிழ்நாடு இப்போது எப்படி இருக்கிறது?  காசுகொடுத்து தண்ணீர்,காசுகொடுத்து பாதை, காசுகொடுத்து மருத்துவம், காசுகொடுத்து கல்வி என்று வாழும் நிலையில். இந்த  நாட்டில் திமுக அதிமுகவால் மாற்றம் கொண்டுவர முடியாது. ஏனெனில், அவர்கள்தான் இந்த நிலையை உருவாக்கியவர்கள். அதனால் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாக்களிப்பதால் எப்படி நல்லாட்சி வரும்?

மிக்சி,கிரைண்டர்,டிவி,அரிசி என்று இலவசம் மட்டுமே தீர்வு இல்லை. நம்மால் உழைத்து வாங்கக் கூடிய பொருட்கள் இவை. அதே போல வேட்டி, சேலை, மடிக்கணினிகளும்தான்  நமது உழைப்பால் வாங்கமுடியக் கூடிய பொருட்கள். அதனால் இவை தேவை இல்லை.

மருத்துவம், கல்வி, போக்குவரத்து, மின்சாரம் இதெல்லாம்தான் அரசு இலவசமாகக் கொடுக்கணும். ஆனால் இதை வழங்காத அரசுகள் இலவசம் கொடுத்து மக்களை அடிமைப்படுத்தி வைத்து இருக்கிறது. இதில் திமுகவும் அதிமுகவும் வேறுபடுவதில்லை.

அரை பவுன் தங்கத்தில் தாலிக்கு ஆசைப்பட்டு, லட்சக் கணக்கான கோடிகளை ஊழல் செய்து சம்பாதிப்பவர்களிடம்  நாட்டைக் கொடுக்கிறானே தமிழன். அரைப்பவுன் தங்கத்தைக் கொடுத்துவிட்டு, மதுவுக்கு அடிமையாக்கி நமது உறவுகளை உயிரிழக்கச் செய்து, பல தமிழ்ப் பெண்களின் தாலியை அறுத்தது  இவர்கள்தானே. எந்த மாநிலத்திலாவது முதலமைச்சர் சாராய ஆலை வைத்து சாராயம் காய்ச்சுகிறார்களா? இல்லையே. நீங்களும் நானும் நமது கோவில் திருவிழாவுக்கு சாராயம் காய்ச்சி குடிக்கமுடியுமா? அப்படி செய்தால் அது கள்ளச் சாராயம் என்று கூறி போலீஸ் நம்மை உள்ளே போடுவாங்க. ஆனால் ஜெயலலிதா, கருணாநிதி காய்ச்சினால்  அது நல்ல சாராயம்.

பொங்கல் பரிசுக்கும், அஞ்சுக்கும் பத்துக்கும் இலவசதிற்காக மானத்தை விட்டுவிட்டு கையெந்தி நிற்கிறானே தமிழன். அது மட்டுமில்லாமல்,எந்த தலைவருக்கு பிறந்தநாள் வரும்.இலவசமாக திருமணம் செய்து வைப்பார்களே  என்று ஏங்கிக் கிடக்குறான் தமிழன்.இந்த இழிநிலை மாறவேண்டும்.” என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அப்போது, ” என்னை காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பரதேசி என்று கூறியதாக  சொல்கிறீர்கள். மதிப்பிற்குரிய தலைவர் அவர். பலமுறை அவர் இது போல தவறான வார்த்தைகளை கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சியில் உள்ள விஜயதாரணி இப்படி எல்லோரையும் குறித்து தவறாகப் பேசுவது அவருக்கு வழக்கம். பின்னர் வருத்தம் தெரிவிப்பதும் வாடிக்கை. அவர் என்னை பரதேசி என்று கூறியதால் நான் சிறுமைப் பட்டுபோவதுமில்லை. என்னை அவர் புகழ்வதால் எனக்குப் பெருமையும் சேரப்போவதில்லை.” என்று தெரிவித்தார்.

Leave a Response