
மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், அதிமுக சார்பில் ஜெயபால் போட்டியிட்டனர். இதில், பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து 2021 இல் நடந்த தேர்தலில் பிடிஆரை எதிர்த்து பசும்பொன் தேசியக் கழகத் தலைவர் ஜோதி முத்துராமலிங்கம் போட்டியிட்டார். இத்தேர்தலில் பிடிஆர் வெற்றி பெற்றதுடன் அமைச்சரும் ஆனார்.
இந்தமுறை மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட விரும்பி அதிமுகவினர் பலர் தீவிரமாக வேலை பார்த்து வந்தனர்.அதேநேரம் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட அமமுகவினரும், பாஜகவினரும் விரும்பி அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.இந்தத் தொகுதியைக் கைப்பற்றுவதில் அமமுகவினர் ரொம்பவே தீவிரமாக இருந்தனர்.
அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதில், அமமுக சார்பில் தென்மாவட்டங்களிலுள்ள பெரியகுளம், மதுரை மத்தி, காரைக்குடி ஆகிய தொகுதிகள் இருக்கும் என அமமுகவினர் உறுதியாக எதிர்பார்த்தனர்.இதில்,மதுரை மத்திய தொகுதி மட்டும் கிடைக்கவில்லை. இதனால் அமமுகவினர் மிகுந்த வருத்தமடைந்தனர்.
அமுமுகவிற்கான பட்டியலில் மதுரை மத்திய தொகுதி இல்லாததால் அதிமுகவினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இந்தமுறை எப்படியும் அதிமுகவிற்குதான் இந்தத்தொகுதி என எதிர்பார்த்திருந்தனர்.ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் மதுரை மத்திய தொகுதியை கூட்டணிக் கட்சியான புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது அதிமுக தலைமை.
அக்கட்சியின் வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி போட்டியிடுவார் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
இது அதிமுகவினருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தப்பகுதியில் யாருக்கும் தெரியாத ஒரு கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதும்,அதில் சென்னையில் வசிப்பவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்ததும் அதிமுகவினரை சொல்ல முடியாத துயரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.
அத்தொகுதி அதிமுகவினர் இதுபற்றிக் கூறுகையில்…
2021 தேர்தலிலும் திடீரென பசும்பொன் தேசியக் கழகத்திற்கு மதுரை மத்திய தொகுதியை ஒதுக்கீடு செய்தனர். தற்போதும் திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்திருப்பது எங்களுக்கு துயரத்தையே தந்துள்ளது. மதுரையில் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் அதிமுக, பாஜக மற்றும் அமமுகவினர் இடையே ஒத்துப்போகாத நிலையில் நான்காவதாக ஒருதரப்பு உள்ளே வந்திருப்பதால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். உள்ளூர் அதிமுகவினர் பலர் இருக்கும்போது,சுந்தர்சிக்கு வாய்ப்பு தந்ததை நாங்கள் விரும்பவில்லை. எங்களது குமுறல்களை தலைமைக்கு வெளிப்படுத்தி உள்ளோம்.
மதுரை கப்பலூர் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சியின் 140 அடி உயரச் சிலை அமைப்பதற்காக கடந்த மாதம் மதுரை வண்டியூர் பகுதியில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் இயக்குநர் சுந்தர்.சி பங்கேற்றிருந்தார்.அப்போதே இது முடிவாகியிருப்பது இப்போதுதான் தெரிகிறது என அதிமுகவினர் வருந்துகின்றனர்.
மதுரை மத்திய தொகுதியில் பிள்ளைமார் மற்றும் முதலியார் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவிற்கு உள்ளனர்.பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் இயக்குநர் சுந்தர்.சி என்பதாலும், இரட்டை இலைச் சின்னத்தில் அவரை நிறுத்தினால் சுலபமாக வெற்றி பெறலாம் என்ற எண்ணமும்,அதோடு, பிராமணர்களின் வாக்கும் இந்தத் தொகுதியில் கணிசமாக உள்ளது. அதிமுக மற்றும் பாஜக ஆதரவு இருப்பதால் பிராமணர் வாக்குகளும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஏ.சி.சண்முகம், சுந்தர்.சியை வேட்பாளராக நிறுத்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.


