
2026 பிப்ரவரி 24 ஆம் தேதி கமுதி அருகே தன்னுடைய கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார் சசிகலா. தொடர்ந்து மார்ச் 13 அன்று தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை சசிகலா அறிவித்தார்.
கட்சியின் பெயர்,அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும், சின்னம் தென்னந்தோப்பு என்றும் அதிரடியாக அறிவித்தார்.
தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கவில்லை. சின்னம் ஒதுக்கியதாக எந்த தகவலும் இல்லை. ஆனால், திடீரென்று கட்சியின் பெயரையும், சின்னத்தையும் அறிவித்துள்ளாரே? இது எப்படி என்று பார்த்தால், இதன்பின்னால் கிட்டத்தட்ட 10 ஆண்டு கதை இருக்கிறது.
மதுரை, எஸ்எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி.எம்ஜிஆரின் தீவிர இரசிகரான இவர், தன் பெயரை எம்ஜிஆர் சிவா என்ற அடைமொழியுடன், தன்னையும் எம்ஜிஆரைப் போலவே மாற்றிக் கொண்டார்.
நடை,உடை,முகபாவனை,தலைமுடி என எல்லாம் மாற்றிக் கொண்டவர்.தொப்பியில்லாத எம்ஜிஆரை போல கறுப்புக் கண்ணாடியுடனே மதுரையில் வலம் வருவார். கையில் கடிகாரமும் இருக்கும். ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார். தனது அரசியல் ஆர்வத்தால், மதுரை எஸ்.எஸ்.காலனியில் 2016-17 காலகட்டத்தில் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும், அதன் நிறுவனத் தலைவராக தன் பெயரையும் பதிவு செய்து வைத்திருந்தார்.
இதற்கிடையில் பசும்பொன்னில் கட்சிக்கொடியை அறிமுகம் செய்த சசிகலாவிடம்,புதிதாக அரசியல் கட்சியைப் பதிவு செய்தால் இடையூறு வரும் ஏற்கனவே பதிவு செய்த கட்சியாக இருந்தால் சரியாக இருக்கும் என்று சிலர் கூறியபோது ஆதரவாளரான மதுரை சுரேஷ் என்பவர், சக்கரவர்த்தி என்பவர் எம்ஜிஆர் பெயரில் ஒரு கட்சியை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளார் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து,சக்ரவர்த்தியை அழைத்துப் பேசிய சசிகலா, அவரது கட்சியையும், அதற்காக ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னமான தென்னந்தோப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனப் பேசி முடித்து அறிவித்துள்ளார்.
இதில், கட்சி பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்திக் கொள்வது என்றும், கொடியை மட்டும் மாற்றிக் கொள்ளலாம் என முடிவு செய்துதான்,நடுவில் உள்ள நீலநிறம் மற்றும் எம்ஜிஆரின் படத்தை நீக்கிவிட்டு, அதிமுகவின் கொடியைப் போலவே கறுப்பு, வெள்ளை,சிவப்பு நிறக் கொடியில் நடுவில் அண்ணா,எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்தக்கட்சியின் நிறுவனத் தலைவராக சக்கரவர்த்தி பதிவு செய்துள்ள நிலையில், அவர் அந்தப்பதவியில் தொடருவாரா? அல்லது சசிகலா பெயருக்கு மாற்றிக் கொடுத்துள்ளாரா? என்பது,கட்சியின் தலைமை நிர்வாகிகள் யார் என்பதெல்லாம் சசிகலா வெளிப்படையாக அறிவிக்கும்போதுதான் தெரியும்.


