
ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி புதுக்கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், சசிகலா கணவர் நடராஜனின் தம்பி மகன் மருது(எ) கண்ணன் ஆகிய இருவரும் செய்து வருகின்றனர்.
இதுபற்றி சசிகலா ஆதரவாளர்கள் கூறுகையில்,
வரும் 24 ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் சுமார் 50,000 பேரை திரட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.அந்தக்கூட்டத்தில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.எம்.ஜி.ஆர். ஜெயலலிதா பெயரை இணைத்து புதுக்கட்சியின் பெயர் இருக்கலாம்.
இந்தக்கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதில் கடைசி நேரத்தில் தாமதம் ஏற்பட்டால்,ஏற்கனவே திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை பதிவு செய்து வைத்துள்ளார்.அந்தக்கட்சியையே சசிகலா தலைமை தாங்கி நடத்தவும் வாய்ப்பு உள்ளது என்றனர்.
24 ஆம் தேதி பொதுக்கூட்டம் முடிந்தபின், தமிழகம் முழுவதும் சசிகலா பரப்புரைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். துரோகிகளையும்,எதிரிகளையும் எதிர்த்து சசிகலாவின் புதியபயணம் என்ற பெயரில் அந்த பிரசாரம் இருக்கும்.எத்தனையோ துரோகிகளை சசிகலா பார்த்து விட்டார்.இனி சசிகலாவின் வேறொரு முகத்தை எதிரிகளும்,துரோகிகளும் பார்ப்பார்கள். 2026 தேர்தலுக்குப் பின் துரோகிகள் சசிகலாவிடம் ஓடி வருவார்கள்.அந்தக்காலம் நிச்சயம் வரும்.
கடந்த 10 நாட்களாக எடப்பாடி பழனிசாமியோ, தினகரனோ சசிகலா பற்றி எதுவும் பேசவில்லை. சசிகலாவின் இந்த அதிரடி நடவடிக்கை அவர்கள் இருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சசிகலா பரப்புரைப் பயணத்தின் போது,நான் என்ன தவறு செய்தேன்.ஏன் என்னை அதிமுகவில் இருந்து நீக்கினார்கள் என்று ஒரு பிரதான கேள்வியை முன் வைக்கப்போகிறாராம்.
மேலும் ஜெயலலிதா காலத்திலேயே அதிமுகவில் எனது பங்களிப்பு இருந்தது.என்னால் பதவிக்கு வந்தவர்கள், பதவி சுகத்துக்காக இன்று துரோகம் செய்து விட்டனர். அதிமுகவையும் அழிவுப்பாதைக்கு எடுத்து சென்று விட்டனர் என்றும் சசிகலா பரப்புரை செய்யவுள்ளாராம்.


