எடப்பாடி அணியின் வாக்குவங்கி 5 விழுக்காடு – முன்னாள் நிர்வாகி தகவல்

புதுச்சேரி முதலமைச்சர் இரங்கசாமியை அவரது இல்லத்தில் முன்னாள் அதிமுக நிர்வாகி பெங்களூரு புகழேந்தி நேற்று சந்தித்துப் பேசினார்.அந்தச் சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

புதுச்சேரி முதலமைச்சர் காமராஜர் வழி வந்தவர். மூத்த தலைவர். புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளராக ஜெயலலிதாவால் நான் நியமிக்கப்பட்டு ஓம்சக்திசேகருக்கு தேர்தல் பணியாற்றும்போது இரங்கசாமியுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் போற்றுதலுக்குரிய தலைவர். புதுச்சேரியின் தந்தையாக உள்ளார். மக்களின் செல்வாக்கைப் பெற்றவர். ஆகவே மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். இப்போது எந்தவித அரசியலும் இல்லை.

அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி சீரழித்துவிட்டார். தவறான பாதையில் சென்றுவிட்டார். அதிமுகவையே பழனிச்சாமி முடித்துவிட்டார். அவர் தலைமையிலான அணி நான்கவது இடத்துக்குத்தான் வரும். சீமானுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் தான் போட்டி. அதனை யாருடனும் ஒப்பிட வேண்டாம்.

விஜய் எழுச்சிமிகு மாநாட்டைப் பார்த்தோம். இளைஞர்கள் கடல் அலையென திரண்டு இருந்ததைப் பார்க்க முடிந்தது. தமிழ்நாடு முதலமைச்சரை அங்கிள் என்று கூறியதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை திமுகவுக்கு எதிரணி என்றால் தவெக தான்.

இவ்விரு கட்சிகளுக்கும்தான் போட்டி என்று விஜய் சொன்னது தான் 100 விழுக்காடு உண்மை. அதுதான் நடக்கப்போகிறது. பழனிச்சாமி காலியாகிவிடுவார். தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்டோரின் கட்டவுட்களை விஜய் பயன்படுத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இது வரவேற்கக்கூடியது.

அரசியல் ரீதியாக எங்களுக்கு எதிரி பாஜக, திமுக என்று தெளிவாகவும் அவரது கொள்கையைக் கூறுகிறார். ஆளும் கட்சியோடு மோதுவது தவறு இல்லை. அதிமுகவுக்கும், திமுகவுக்கும் போட்டி என்று திமுக சொல்வதை நான் ஏற்கமாட்டேன். பாஜகவுடன் பயணம் செய்பவர்களை எப்படி திமுக ஏற்றுக்கொள்ள முடியும். எடப்பாடி பழனிச்சாமி அணி அரசியலில் ஆதரவற்றோராகிவிட்டது.

பழனிச்சாமி எவ்வளவு தூரம் அரசியல் பயணம் செல்கிறாரோ அவ்வளவும் திமுகவுக்கு சாதகமாக போய்க்கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. எழுந்து இனி நிற்கமுடியாது. மக்கள் வெறுத்துப் போயுள்ளனர்.

இன்னும் 30 நாட்களில் அரசியல் வேறு விதமாகத் திரும்பும். அதனை இப்போது என்னால் சொல்ல முடியாது. ஒட்டுமொத்தமாக 20 விழுக்காடு வாக்கு வாங்குவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். அது 5 விழுக்காடு கூட வராது. அந்த நிலைபாட்டை முக்கியமான ஆளாக நானே எடுக்கப்போகிறேன். அதிமுக தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும்.

விஜய் மாநாட்டுக்கு ஓபிஎஸ் ஆதரவு அளித்தார் என்பது பொய். விஜய், தனியாகத்தான் அந்த மாநாட்டை நடத்தியுள்ளார். ஓபிஎஸ் அரசியல் பயணம் மேற்கொண்டால் அரசியல் மாற்றம் வரும். ஆனால் அவர் செய்வது இல்லை. அதுதான் வருத்தம் அளிக்கிறது. ஓபிஎஸ் தலைவர் என்பதிலும். அவர், ஜெயலலிதாவால் முதலமைச்சராக்கப்பட்டவர் என்பதிலும் எந்தவித மாற்றமும் இல்லை.

ஓபிஎஸ்ஸை மக்கள் திரும்பிப்பார்க்க வேண்டும் என்றால் அரசியல் களத்தில் அவர் ஏதேனும் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் யாரும் வரமாட்டார்கள். பாஜக பக்கம் ஓபிஎஸ் செல்லமாட்டார். அப்படிச் சென்றால் அவருடன் யாரும் இருக்க மாட்டார்கள். கவுன்சிலர் சீட்டு கூட வெற்றிபெற முடியாத கட்சியுடன் பயணம் செய்ய விரும்புவது தவறில்லையா?

பாஜகவுடன் செல்லமாட்டோம் என்று கூறிவிட்டு அவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஜோக்கராகிவிட்டார். பழனிச்சாமிக்கும் கட்சிகளுக்கும் இடையே போட்டி இல்லை. அவருக்கும் ஆம்புலன்ஸுக்கும்தான் இப்போது போட்டி. அதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. பழனிச்சாமி கீழ்ப்பாக்கம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response