போகி – திரைப்பட விமர்சனம்

நாயகர்கள் நபிநந்தி மற்றும் சரத் ஆகியோர் பெண்களை இரகசியமாகப் படம்பிடித்து அதை வைத்து மிரட்டிப் பணம் சம்பாதிக்கும் கூட்டத்தைக் கொலை செய்கிறார்கள்.இன்னொரு பக்கம் காவல்துறையும் அவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது இவர்கள் தங்களுடைய தனிப்பட்ட சுகதுக்கங்களைக் கைவிட்டு விட்டு இந்த ஆபத்தான வேலையில் ஈடுபடுவது ஏன்? என்கிற கேள்விக்கான விடைதாம் படம்.

அறிமுக நாயகன் நபிநந்தி, புதிதாக நடிக்க வந்தவர் போலில்லாமல் அனுபவ நடிகர் போல் நடித்திருக்கிறார்.காதல் மோதல் பாடல் என்றில்லாமல் அழுத்தமான பாச உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வேடத்துக்கு நியாயமாக நடந்து கொண்டிருக்கிறார்.

இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் சரத்தும், கொடுத்த வேடத்துக்குக் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பூனம்கவுர், இளைஞர்களை ஈர்ப்பதற்காகவும் இன்னொரு நாயகி சுவாசிகா,திரைக்கதைக்கு அழுத்தம் கொடுக்கவும் பயன்பட்டிருக்கிறார்கள்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, வில்லன் கதாபாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் பயமுறுத்தும் நான் கடவுள் ராஜேந்திரன், ஒரு காட்சியில் வந்தாலும் சிரிக்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், மூத்த நடிகர் சங்கிலி முருகன், ‘பிச்சைசக்காரன்’ கார்த்தி ஆகியோரும் நன்று.

ராஜா சி.சேகர் ஒளிப்பதிவில், காட்சிகள் கண்களுக்கு இதமாகவும் நெஞ்சம் நடுங்க வைக்கும் வகையிலும் அமைந்திருக்கின்றன.

மரியா மனோகர் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம், திரைக்கதையின் ஆழம் உணர்ந்து பின்னணி இசைத்திருக்கிறார்.அது படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

சுரேஸ் அர்ஸ் படத்தொகுப்பு படத்தை இலகுவாக்குகிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் விஜய்சேகரன்.எஸ். உயிரோடிருக்கும் போது பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவது உலகறிந்த செய்தி,ஆனால் இறந்த பின்னும் அந்தக் கொடுமை தொடருகிறது என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார்.அது தொடர்பான காட்சிகள் நடுங்க வைக்கின்றன.

நவீன கைபேசிகள், சமூக வலைதளங்கள் ஆகியனவற்றைப் பயன்படுத்தும் பெண்களுக்கு விழிப்புணர்வையும் பெண்களை வியாபாரப் பண்டமாக நினைத்துச் செயல்படுவோருக்கான எச்சரிக்கையையும் கொடுத்திருக்கும் படம்.

– சுரேஷ்

Leave a Response