
தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விமான நிலைய திறப்பு விழா இன்று இரவு நடக்கிறது.
மாலத்தீவு சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மோடி,இன்று அங்கிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு தூத்துக்குடிக்குச் செல்கிறார்.
அங்கு விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, ரூ.4500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
தூத்துக்குடி விழா நிறைவுற்றதும் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 10.35 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள அரசினர் விடுதியில் இரவு தங்கி ஓய்வெடுக்கும் பிரதமர், 27 ஆம் தேதி (ஞாயிறு) ஹெலிகாப்டரில் காலை 11.10 மணிக்கு அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
மதியம் 12 மணிக்கு கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி அங்கு தான் கொண்டு வந்துள்ள கங்கை நீரால் அபிசேகம் செய்து வழிபடுகிறார். பின்னர் விழா நடைபெறும் இடத்துக்குச் செல்லும் அவர், அங்கு தொல்லியல் துறையால் அமைக்கப்படும் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடுகிறார். விழாவில் இராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். மேலும் அதன் தொடர்ச்சியாக இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி செல்லும் பிரதமர் பிற்பகல் 2.15 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமர் வருகையின்போது, அவரை தூத்துக்குடி விமானநிலையத்தில் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கு அனுமதி அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதேசமயம், கடைசி நேரத்தில் பிரதமர் அனுமதி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல் இருப்பதால் பிரதமரை ஓபிஎஸ் சந்திப்பாரா? இல்லையா? என்கிற பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கிறது.
அதற்கு இன்றிரவு விடை தெரிந்துவிடும்.


