குஜராத் விமான விபத்து – 169 இந்தியர் 53 வெள்ளையர் நிலை?

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் இலண்டன் நோக்கி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஏர் இந்தியா 171 என்ற எண் கொண்ட இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்த நிலையில், அவர்களின் நிலை குறித்த தகவல்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தை அடுத்து, விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து நடந்த அகமதாபாத் குடியிருப்புப் பகுதியில் இருந்து தீப்பிழம்புடன் கரும்புகை பெருமளவில் வெளியானது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து ஒன்பதரை மணி நேரம் பயணித்து இலண்டன் செல்லக்கூடியது என்பதால், விமானத்தில் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளானதும் தீப்பிடித்தது என்றும், தீ அணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன என்றும் தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் கடியா தெரிவித்தார்.

“விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மேகனிநகர் பகுதியில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. மீட்புப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது” என்று அகமதாபாத் காவல்துறையினர் ஜி.எஸ்.மாலிக் கூறினார். விமான விபத்து தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக குஜராத் முதல்வர், உள்துறை அமைச்சர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் பேசியுள்ளார்.

விமான விபத்து குறித்து தெரிவித்துள்ள சிவில் ஏவியேஷன் அமைச்சர் இராம் மோகன் நாயுடு “அகமதாபாத் விமான விபத்து பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளேன். நாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறோம். தனிப்பட்ட முறையில் நிலைமையை நான் கண்காணித்து வருகிறேன். அவசர காலங்களில் செயல்பட வேண்டிய அனைத்து நிறுவனங்களையும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.மீட்புக் குழுக்கள் திரட்டப்பட்டுள்ளன. மேலும், மருத்துவ உதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் விமானத்தில் உள்ள அனைவர் குறித்தும் அவர்களின் குடும்பத்தினர் குறித்துமே இருக்கிறது எனத்தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அகமதாபாத்திலிருந்து இலண்டன் கேட்விக் செல்ல வேண்டிய ஏர் இந்தியா 171 விமானம் புறப்பட்ட பிறகு விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது. அகமதாபாத்திலிருந்து மதியம் 13.38 மணிக்கு புறப்பட்ட இந்த போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response