நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கோடநாடு எஸ்டேட்டுக்கு மே 19 அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழியும், கோட நாடு எஸ்டேட் பங்குதாரருமான சசிகலா சென்றார்.
கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் எஸ்டேட் நுழைவு வாயில் பகுதியில் நீண்ட வரிசையில் நின்று அவரை வரவேற்றனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி கோரினோம்.ஆனால், ஏதேதோ காரணங்களைச் சொல்லி ஜெயலலிதாவின் உருவச் சிலை மற்றும் மணி மண்டபம் கட்டுவதற்கு திமுக அரசு தடை விதித்து வருகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு ஸ்டேட்டில் மணி மண்டபம் கட்டுவதற்கு, திமுக அரசு தொடர்ந்து பல்வேறு தடைகளை விதித்து வருகிறது.
தனியாருக்கு சொந்தமான இடங்களில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப இதுபோன்ற மணி மண்டபங்களை அமைத்து வழிபாடு செய்து கொள்ளலாம். ஆனால், எங்களுடைய கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாகம் நிராகரித்துள்ளது.
எனினும், அனைத்து தடைகளையும் மீறி நிச்சயமாக இங்கு ஜெயலலிதாவுக்கான மணி மண்டபத்தை எழுப்புவோம். சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும் என்றால் மக்கள் துணை இருக்க வேண்டும். நான் சென்ற இடங்களில் எல்லாம் அதுவே மக்களின் எண்ணமாக உள்ளது. தற்போது மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு வரி, வரி என வசூல் செய்வதில் முனைப்பு காட்டுகிறது. மக்களிடம் வசூல் செய்து திட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன. இந்த நிலை மாற ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும். நான் அதை கொண்டு வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து தீவிரமாக திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த நேரத்தில் சசிகலா இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத் தக்கதாக உள்ளதென அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.