இந்தியாவும், பாகிஸ்தானும் போரை நிறுத்த ஒப்புக்கொண்ட பின்னர் இந்தியா சார்பில் அந்த அறிவிப்பை வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள சமூகவலைதளங்களில் அவரை சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவரை ‘துரோகி’, ‘தேசத்துரோகி’, ‘நம்பிக்கை துரோகி’ என்ற அவதூறான வார்த்தைகள் மூலம் வசை பாடினர். சிலர் விக்ரம் மிஸ்ரியின் மகள்களின் குடியுரிமையைப் பற்றி கேள்வி எழுப்பி, விமர்சித்தனர். விக்ரம் மிஸ்ரி மட்டுமல்லாது அவரது ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் வலைதளவாசிகள் அவதூறாகப் பேசினர்.
இதனால் அதிர்ந்து போய் விட்டார் விக்ரம் மிஸ்ரி. அவரது எக்ஸ் வலைதளக் கணக்கை தனிப்பட்ட கணக்காக மாற்றி விட்டார். தனிப்பட்ட கணக்காக மாற்றப்பட்டுவிட்டதால், அவரது எக்ஸ் பக்கத்தில் இனி யாரும் கருத்து தெரிவிக்க முடியாது.
விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது மகள்களைப் பற்றிய விமர்சனம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜய கிஷோர் ரஹத்கர் இதைக் கண்டித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்….
இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் குடும்பத்தினரைக் குறிவைத்து நடத்தப்படும் ஆன்லைன் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரின் மகளுடைய தனிப்பட்ட தொடர்பு விவரங்களை பகிரங்கமாகப் பகிர்ந்தது பொறுப்பற்ற மோசமான செயலாகும். இது தனிநபர் உரிமை மீறலாகும். இத்தகைய செயல்கள் அவரது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகக் கூட அமையலாம். குடிமைப் பணி அதிகாரிகளின் குடும்பத்தினர் மீதான இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்கள் ஏற்பதற்கில்லை. மேலும் இவை ஒழுக்கநெறியற்ற செயல். ஒவ்வொருவரும் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டுகிறோம். சுய கட்டுப்பாடு தேவை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை குறிவைத்து இணையத்தில் விமர்சிக்கப்படும் விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக விக்ரம் மிஸ்ரி மகளை அவமானப்படுத்தும் படத்தை பகிர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி,’அரசாங்கம் ஏன் அமைதியாக இருக்கிறது? ட்ரோல்களுக்கு அவமானம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா தனது எக்ஸ் பதிவில்,’ பிரதமர் மோடி எடுத்த முடிவுக்கு வெளியுறவுத்துறை செயலாளரை ஏன் ட்ரோல் செய்யப்பட வேண்டும்? பயங்கரவாதிகளின் வகுப்புவாத வடிவமைப்பைத் தோற்கடித்ததற்காக இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்ததாலா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ்,போர் நிறுத்தம் போன்ற முடிவுகளை எடுப்பது அரசாங்கமே தவிர தனிப்பட்ட எந்த அரசு அதிகாரியும் இல்லை. ஆனால், சில சமூகவிரோதிகள் எல்லா எல்லைகளையும் மீறி அதிகாரியையும், அவரது குடும்பத்தினரையும் வசை பாடியுள்ளனர். இந்தச் சூழலில் பாஜக அரசோ, அல்லது அமைச்சர்களோ அவரது மாண்பைக் காப்பாற்றவும், சமூக விரோதிகள் மீது நடவடிக்கை குறித்தும் வாய்திறக்கவில்லை என்று எக்ஸ் தளத்தில் இந்தியில் கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது மகள்களைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்தது ஆளும் பாஜகவினர் மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது.