அண்ணா பல்கலைக்கழக மாணவி சிக்கலில்,பத்திரிகையாளர்களிடம்
விசாரணை என்ற பெயரில் ஆதாரங்களைப் பாதுகாக்கும் உரிமையைப் பறிப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்….
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பொதுவெளியில் வெளியானது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொழில்நுட்பக் கோளாறால் கசிந்ததாக தேசியத் தகவல் மையம் தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துள்ள நிலையில், காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக்குழு முதல் தகவல் அறிக்கையை பதிவிறக்கம் செய்த பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தியிருக்கிறது. அவர்களின் செல்போன்களையும் மின்னணுக் கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளது.
இதன் மூலம் பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட தொடர்புகளைத் தெரிந்துகொள்வதுடன், செய்திக்கான ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கான உரிமையும் பறிக்கப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறைத் தலைவர் (டிஜிபி), சிறப்பு புலனாய்வுக்குழு உட்பட்டோரிடம் நேரில் முறையிட்ட பிறகும் செல்போன்கள் திருப்பித்தரப்படவில்லை.
எப்.ஐ.ஆரை பதிவிறக்கம் செய்து செய்தியாக ஒளிபரப்பியதில் நடந்த விதிமீறல் குறித்த விசாரணை என்ற பெயரில், இதுபோன்று நடப்பது ஏற்க முடியாததாகும்.
சட்ட விதிகளைப் பின்பற்றாமல் பத்திரிகையாளர்களை அழைத்து விசாரணை நடத்துவதுடன், ஆதாரங்களைப் பாதுகாக்கும் உரிமையையும் கருத்து சுதந்திரத்தையும் பறிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வலியுறுத்துகிறது.
எல்.ஆர்.சங்கர்
தலைவர்
வ.மணிமாறன்
பொதுச்செயலாளர்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பிப்ரவரி 1 மாலை ஆரப்பாட்டம் நடத்தப்பட்டது.