பிரமிள் என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் 1939 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் பிறந்தவர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவர். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.
சிவராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தர்மு சிவராம், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார்.
உடல்நலம் குன்றிய நிலையில் வேலூர் அருகிலுள்ள கரடிக்குடியில் மருத்துவர் சிவரமணி என்போரது பாதுகாப்பில் இருந்த அவர், 1997 சனவரி 6 ஆம் நாள் மறைந்தார்.
அவர் மறைந்து இருபத்தெட்டு ஆண்டுகளாகிவிட்டன.
எனினும் அவர் நினைவைப் போற்றும் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.
பிரமிளின் இருபத்தெட்டாவது நினைவு நாளான சனவரி 6,2025 அன்று, பிரமிள் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட வேலூர் மாவட்டம் கரடிகுடியில் அவருக்கு நினைவு மரியாதை செலுத்தப்பட்டது.
கரடிகுடி ஊராட்சி மன்றத் தலைவர் கிரிதரன்,பிரமிள் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அவருடன்,கரடிகுடி முன்னாள் நூலகரும் பிரமிளின் இறுதிக் காலத்தில் அவருடன் பழகியவருமான ஜெகதீசன்,பிரமிள் குறித்து காற்றின் தீராத பக்கங்களில் எனும் ஆவணப்படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் தங்கம்,திரைப்பட இயக்குநர் எஸ்.டி.புவியரசன்,வைத்தியர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்ச்சூழலில் படைப்பாளிகள் கொண்டாடப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டை முறியடிக்கும் விதமாக தமிழின் முதுசம் என்று புகழப்படும் கவிஞர் பிரமிளின் நினைவு நாள் கடைபிடிக்கப்படுவதும் அதில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் பங்கேற்று மரியாதை செலுத்துவதும் நினைத்து மகிழத்தக்க நிகழ்வென்றால் மிகையில்லை.