கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கூறியதாவது…..
அதிமுக ஆட்சியில் மின் கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘ஓலா’, ‘டாடா’, ‘டெல்டா’ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன. நீர் மேலாண்மைத் திட்டங்கள், மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவை தொடங்கப்பட்டன.
இதேபோல, மாநிலம் முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் எந்தத்திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தவறான தகவலைத் தெரிவிக்கிறார். வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றத் திட்டமிட்டு, அதற்கான சர்வே பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால், தமிழக அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் இப்பணியை மேற்கொள்கிறது. இதைக் கண்டிக்கிறோம்.
இந்தப் பணியை மேற்கொள்ளும் மாணவர்களை பாம்பு, விஷப் பூச்சிகள் கடித்துள்ளன. மாணவர்கள் உயிரிழந்தால், அதற்கு தமிழக அரசுதான் காரணம்.
தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று நான் கூறியது பாஜக அல்லாத மற்ற கட்சிகளையே குறிக்கும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்ற எங்களது முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதால், அதிமுக வாக்குகள் குறையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களுடன், அதிமுக பலமான தொண்டர்களைக் கொண்டுள்ளது. எனவே, விஜய் கட்சியால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் வராது.
அரசு மருத்துவரை கத்தியால் குத்தியதை யாராலும் ஏற்க முடியாது. மருத்துவர்கள் ஓய்வின்றி உழைப்பவர்கள். அவர்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சில நாட்களுக்கு முன் திருச்சியில், பாஜக இல்லாத கூட்டணிக்குத் தயாரா? என்ற கேள்விக்கான பதிலாக, மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டுமென ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமையும் என்று சொல்லியிருந்தார்.
அதற்கு நேர்மாறாக நேற்று பேசியிருப்பதால் அவருடைய கட்சித் தொண்டர்கள் உட்பட அனைவரும் குழப்பமடைந்துள்ளனர்.