இப்போது இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜகவின் தாய் அமைப்பு ஆர் எஸ் எஸ் எனும் ராஷ்டிரிய சுயம் சேவக் அமைப்பு.அந்த அமைப்புதான் பாஜகவில் யார் தலைவராக வேண்டும்?தேர்தல்களில் வெற்றி பெற்றால் யார் பிரதமராக வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கிற அமைப்பு என்று சொல்லப்படுகிறது.
இப்போது அந்த அமைப்பின் தலைவராக மோகன் பகவத் என்பவர் இருக்கிறார்.
அவர் தற்போதைய பிரதமர் மோடிக்கு எதிராகச் செயல்படுகிறார்.மோடி பிரதமராக நீடிக்கக்கூடாது என்று சொல்கிறார் என்கிற கருத்துகள் அவ்வப்போது வெளியாகும்.
கடந்த ஜூன் மாதம் மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்றார் மோடி.
அதன்பின் ஜூலையில், ஜார்க்கண்ட் மாநிலம் விஷ்ணுபூரில் தொண்டர்களிடையே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றிய போது, சிலர் இருக்கிறார்கள், சூப்பர் மேன் ஆசையோடு அவர்கள் நிற்பதில்லை, தேவர்கள் மற்றும் கடவுள் ஆகவும்கூட விரும்புகிறார்கள் எனப் பேசினார்.அது மோடியைத் தாக்கிப் பேசிய பேச்சு என்று பரவலாகச் சொல்லப்பட்டது.
அதன்பின், ஆகஸ்ட் 28,2024 அன்று, மோடி, அமித்ஷாவுக்கு அடுத்தபடியாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திற்கு ஏற்கனவே மத்திய அரசின் உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டும் நிலையில் புதிதாக இந்த அறிவிப்பு வந்தது.
இதுகுறித்து, 28 ஆகஸ்ட் 2024 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திற்கு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையுடன் இசட்- பிளஸ் பாதுகாப்பின் கீழ், கூடுதலாக அட்வான்ஸ் செக்யூரிட்டி லைசன் (ஏ.எஸ்.எல்) பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் பாதுகாப்பானது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அடுத்தபடியாக மோகன் பகவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதற்கு முக்கிய காரணம், பா.ஜ.க. ஆட்சியில் அல்லாத மாநிலங்களுக்கு மோகன் பகவத் செல்லும் போது, அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் எழுந்ததாக உளவுத் தகவல்கள் பகிரப்பட்டன.
மேலும் அவருக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் கிடைத்துள்ளன. அதையடுத்து மோகன் பகவத்துக்கு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையுடன் இசட்-பிளஸ் பாதுகாப்பின் கீழ், ஏ.எஸ்.எல். அந்தஸ்து பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்போது வட இந்தியாவில் பரபரப்பாக ஒரு தகவல் பேசப்பட்டுவருகிறது.
அது, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் பிரதமர் மோடி கண்காணிக்கிறார் என்பதுதான்.
இது உறுதிப்படுத்தப்படாத தகவல் எனினும் திடீரென அவருக்குப் பாதுகாப்பு அதிகரிப்பட்டதைத் தொடர்ந்து இத்தகவல் கசிவதால், பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று சொல்லி அவருடைய நடவடிக்கைகள் கண்காணிப்பு மற்றும் அறிவிக்கப்படாத சிறை வைத்திருக்கலாம் என்கிற ஐயம் எழுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.