இந்திய அரசால் புறக்கணிக்கப்பட்ட வ.உ.சி.க்கு தமிழ்நாடு அரசு தகுந்த நினைவுக் களங்கள் அமைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
வெள்ளை வணிக வேட்டையாடிகளை வெளியேற்றும் விடுதலைப் போராட்டத்தைத் தமிழ்நாட்டில் மக்கள் மயமாக்கி, தற்சார்பு தமிழர் வாணிகத்தை நிலைநாட்ட கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் (1872 செப்டம்பர் 5 – 1936 நவம்பர் 18) அவர்களின் 153 ஆம் ஆண்டு பிறந்தநாள் 05.09.2024 அன்று வருகிறது.
வ.உ.சி. அவர்களின் விடுதலைப் போராட்டப் பங்களிப்புகளை நம் தமிழ்நாட்டு இளையோர் முழுமையாகத் தெரிந்து கொண்டு,அவர் புகழ்பரப்ப இப்போது அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆங்கிலேயர் நடத்தி வந்த தூத்துக்குடி கோரல் மில் நூற்பாலையில் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கம் உருவாக்கிக் கொடுத்து,அவர்களின் ஊதிய உயர்வு,வாரம் ஒருநாள் விடுமுறை போன்ற அடிப்படை உரிமைகளை 1908 இல் வென்று தந்ததுடன்,அத்தொழிலாளர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்ள வைத்தார். வெள்ளைக்கார வணிக வேட்டையாடிகளுக்குப் போட்டியாக சுதேசிக் கப்பல் கம்பெனி உருவாக்கி,இரு கப்பல்கள் வாங்கி தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே வணிகக் கப்பல் விட்டார்.
வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து – வெள்ளை இனவெறி அதிகாரிகள் மண்ணின் மக்களை அவமதிக்கும் கொடுமைகளை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தினார். அயலாரின் காலனி ஆதிக்கத்தை நீக்கி மண்ணின் மக்கள் விடுதலை பெறப் போராடிய வ.உ.சி.க்கும் அவர் தோழர் சுப்பிரமணிய சிவாவுக்கும் ஆங்கிலேயக் காலனி ஆதிக்க அதிகாரிகள் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்தார்கள். நான்காண்டுகள் சிறை வாழ்வுக்குப் பின் மேல் முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை ஆன பிறகு் இந்திய விடுதலைப் போராட்டத்துடன் இணைந்தே இருந்தார்.ஆனால்,காங்கிரசுக் கட்சி வ.உ.சி.அவர்களை ஓரங்கட்டியது.
அனைத்திந்தியக் காங்கிரசுத் தலைமை காங்கிரசுக் கட்சியின் 50 ஆம் ஆண்டு பொன் விழாவில் (1825 – 1935), காங்கிரசின் வரலாற்று நூலை 1935 இல் வெளியிட்டது.அதில் வ.உ.சி. பெயரோ, அவர் நடத்திய விடுதலைப் போராட்டங்களோ இடம்பெறவில்லை.
ம.பொ.சி. அவர்கள் எழுதிய “கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.” நூலும், அதையொட்டி,அதே தலைப்பில் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த திரைப்படமும் தமிழர்களிடையே வ.உ.சி.புகழைப் பரப்பின.
காங்கிரசின் வடநாட்டுத் தலைவர்கள் பலரின் பெயர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் திடல்களுக்கும் தெருக்களுக்கும் வைக்கப்பட்டுள்ளன.ஆனால், வ.உ.சி.யின் பெயர் தில்லித் தலைநகரத்தில் கூட இல்லாத நிலை தொடர்ந்தது. வடநாட்டில் வ.உ.சி. பற்றிப் பாடம் மாணவர்களுக்கு இல்லை.நாம் தமிழ்நாட்டில் வ.உ.சி. அவர்களின் ஈகத்தை,பங்களிப்புகளைப் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும்.
05.09.2024 அன்று, வரும் வ.உ.சி. அவர்களின் 153 ஆம் ஆண்டு பிறந்தநாளை ஒட்டி, பின்வரும் வகையில் வரலாற்றுப் பதிவுகளாக வ.உ.சி. நினைவுச் சின்னங்களை தமிழ்நாட்டில் உருவாக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
1.தமிழ்நாடு அரசு,வ.உ.சி. பெயரால் கடல்சார் ஆய்வுப் பல்கலைக்கழகம் (Maritime University) நிறுவ வேண்டும்.
2.சிறந்த இலக்கிய ஆய்வுகளையும்,பங்களிப்புகளையும் வழங்கியுள்ள வ.உ.சி.யின் இலக்கியப் படைப்புகளை கல்லூரி மாணவர்களுக்கான பாடங்களாக – ஆய்வுப் படிப்புளுக்கானப் பாடத் திட்டங்களாக வைக்க வேண்டும்.
3.உயர்நிலைப் பள்ளி – மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வ.உ.சி.யின் “மெய்யறம் மாணவரியல்” பாடம் வைக்க வேண்டும்.
4.தொல்காப்பியம், திருக்குறள் குறித்த தனிச் சிறப்பான ஆய்வுகளுக்கு வ.உ.சி.யின் பெயரால் தமிழ்நாடு அரசு விருதுகள் அளிக்க வேண்டும்.
5.சென்னையில் வ.உ.சி. அவர்கள் நினைவாக தனிச்சிறப்புமிக்கப் கப்பல் நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும்.
6.வ.உ.சி. அவர்களின் “சுதேசி ஸ்டீம் விக்ஞாபனம்” கொள்கைகளைப் போற்றும் வகையில் கப்பல் கட்டுதல், கடல்சார் வணிகம் குறித்த சிறப்பு நூலகம் அமைக்க வேண்டும்.
7.சென்னையில் வ.உ.சி. வாழ்ந்த சிந்தாதரிப்பேட்டை அருணாசலம் வீதி, மயிலாப்பூர் பூர்ண விநாயகர் கோயில் தெரு, பெரம்பூர் கந்தன் தெரு ஆகியவற்றில் வ.உ.சி.யின் வாழ்க்கைக் குறிப்புகளோடு தெருப் பெயர் சூட்டப்பட்டு, கல்வெட்டு நினைவுத் தூண்கள் நிறுவப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.