கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், ஒன்றிய அரசின் குடிமையியல் பணித் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி கலந்துரையாடும் நிகழ்வு இன்று காலை நடந்தது. சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வரும் இளைஞர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குக் கறுப்புச் சட்டையில் வந்த மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதனால், காவல் துறையினருடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், பத்திரிகையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
கறுப்பு உடை அணிந்து வந்த மாணவ, மாணவிகளை அரங்கிற்குள் அனுமதிக்க மறுத்த காவல்துறையினர், அவர்களை வேறு உடை அணிந்து வரும்படி திருப்பி அனுப்பினர்.இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கறுப்பு உடை அணிந்த மாணவ, மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,ஆளுநர் ஆர்.என்.இரவி கறுப்பு நிற அங்கி அணிந்தபடி நிகழ்வில் பங்கேற்றார்
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்துக் கூறியதாவது…
ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கறுப்பு உடை அணிந்திருந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது கடும் கண்டனத்திற்கு உரியது.இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்வது நல்லதல்ல என்றார்.